/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்:போதையால் பாதை மாறும் வாலிபர்கள்
/
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்:போதையால் பாதை மாறும் வாலிபர்கள்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்:போதையால் பாதை மாறும் வாலிபர்கள்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்:போதையால் பாதை மாறும் வாலிபர்கள்
ADDED : ஜன 16, 2024 02:37 AM
மனித வாழ்வில், ஒழுக்கம் முக்கியமானது. அது இல்லாவிடில், என்ன பிரச்னை ஏற்படும் என்பதை நாம் தினமும் பார்த்து வருகிறோம். சமுதாயத்தில் இன்றைய சூழலில், மது, கஞ்சா போன்ற போதை பழக்கம், ஒரு சமூக தீமையாக மாறிவிட்டது. கொலை, கொள்ளை, குற்றங்களுக்கு இப்பழக்கமே அடிப்படை காரணமாக உள்ளது.
இப்பழக்கத்துக்கு வருங்கால சந்ததியினர் இளம் வயதிலே அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து கொண்டு, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
திருப்பூர் மாநகர், புறநகர் என, பல பகுதியில் கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்கள் சரளமாக புழக்கத்தில் உள்ளது. அவிநாசியை சேர்ந்த, 25 வயது வாலிபர், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில், தற்காலிக டிரைவராக அரசு அலுவலகத்தில் பணியாற்றிய வாலிபர், 'டூப்ளிக்கெட்' சாவியை போட்டு, அதிகாரிகளுக்கு தெரியாமல், வாகனத்தை ஓட்டி சிக்கி கொண்டார். இரு நாட்களுக்கு முன் போதையில் ஒரு வீட்டுக்குள் திருட திட்டமிட்டு, சுவர் ஏறி குதித்த போது, வீட்டின் உரிமையாளர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கினர். தொடர்ச்சியாக போதை வாலிபரின் அட்ராசிட்டி காரணமாக அவிநாசி போலீசார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டனர்.
போதையால்
மாறும் பாதை
கடந்த நவ., மாதம், கோவை மாவட்டம், போத்தனுார் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 27. செட்டிபாளையம் பேரூராட்சி, 10 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர். இவர் தனது மனைவி, ஆறு மாத குழந்தையுடன் ஈரோடு நோக்கி காரில் சென்றார். திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, பின்னால், அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், சந்தோஷ்குமார், ஆறு மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. விபத்தை ஏற்படுத்திய காரில், 22 வயது வாலிபர்கள், நான்கு பேர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.
நேற்று முன்தினம், திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த முகுந்தன், 30, அவரது மனைவி சத்யா, 20. குழந்தை பிருத்விக், 1.5 ஆகியோர் டூவீலரில் சேலத்துக்கு ஊத்துக்குளி வழியாக சென்றனர்.
புலவர்பாளையம் அருகே தாறுமாறாக வந்த கார், டூவீலர் மீது, ரோட்டில் விளையாடி கொண்டிருந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த, மூன்று வயது குழந்தை மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில், பெண் சத்யா மற்றும் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தை பியூட்டி குமாரி பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் வந்த, மூன்று பேரும் போதையில் இருந்தது தெரிந்தது.
இவ்வாறு சாலை விபத்து, பாலியல் பலாத்காரம், கொலை என குற்றச்சம்பவங்களுக்கு போதையே முக்கிய காரணமாக உள்ளது. அதுவும், பல லட்சக்கணக்கான தொழிலாளர் வாழும் திருப்பூரிலும், போதை பொருட்களை ஒழிக்க போலீசார் சாட்டையை சுழற்ற வேண்டும்.