/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெய்வானையை கரம் பிடித்த கந்தப் பெருமான்: பக்தி பரவசத்துடன் திருக்கல்யாண வைபவம்
/
தெய்வானையை கரம் பிடித்த கந்தப் பெருமான்: பக்தி பரவசத்துடன் திருக்கல்யாண வைபவம்
தெய்வானையை கரம் பிடித்த கந்தப் பெருமான்: பக்தி பரவசத்துடன் திருக்கல்யாண வைபவம்
தெய்வானையை கரம் பிடித்த கந்தப் பெருமான்: பக்தி பரவசத்துடன் திருக்கல்யாண வைபவம்
ADDED : அக் 29, 2025 12:46 AM

திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகர் கோவில்களில், கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்தாண்டு, கந்தசஷ்டி விழா, 22ம் தேதி காப்பு அணியும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முருக பக்தர்கள், காப்பு அணிந்து, ஆறு நாட்களும் விரதம் இருந்து வழிபடுகின்றனர். ஆறாவது நாளான நேற்று முன்தினம் மாலை, முருகர் கோவில்களில், சூரசம்ஹாரம் நடைபெற்றது.
முருகப்பெருமானும், வீரபாகுவும் சென்று, அசுரர்களை அழித்தனர்; போர்க்குணம் தணிய ஏதுவாக, சுப்பிரமணியருக்கு அபிேஷகமும், சந்தனகாப்பு பூஜையும் இரவு நடந்தது. நேற்று, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடந்தது.
அவ்வகையில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி, மாதப்பூர் முத்துக்குமாரசாமி, சிவன்மலை சுப்பிரமணியர், திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், கண்டியன்கோவில் கனககிரி, விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில்.
வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர், பலவஞ்சிபாளையம் காளிக்குமாரசாமி கோவில், திருப்பூர் பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் சுப்பிரமணியர், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் உட்பட, அனைத்து கோவில்களிலும், நேற்று திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.
கோவில்களில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' கோஷமிட்டு, திருக்கல்யாண வைபவத்தை மனங்குளிர பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர்.
சஷ்டி விரதம் இருந்த பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, பூ, எலுமிச்சை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பகுதியிலும், விரதம் இருந்த பக்தர்களுக்கு, வடை, பாயசத்துடன் திருக்கல்யாண உற்சவ விருந்து அளிக்கப்பட்டது.
ஆறு நாட்களாக சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள், விருந்தில் பங்கேற்று விரதத்தை நிறைவு செய்தனர்.
l திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கண கிரி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி திருகோவிலில் 15ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருகல்யாண விழா கடந்த 22ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹார விழா நடைப்பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று 28ம் தேதி காலை 8:30 மணிக்கு கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 9:30 மணிக்கு திருக்கல்யாணம், நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆண்டிபாளையம் ஆறுபடை முருக பக்தர்கள் குழு, அணைப்பாளையம் பக்தர்கள், கொங்கணகிரி பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.
l பொங்கலுார் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த, 22ல் துவங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று வள்ளி தெய்வானை முத்துக்குமார பால தண்டாயுதபாணி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண விருந்து, மகா தீபாராதனை, மகா தரிசனம் நடந்தது.

