/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மூத்த குடிமக்கள் நலனும் காக்கப்படணும்'
/
'மூத்த குடிமக்கள் நலனும் காக்கப்படணும்'
ADDED : மார் 22, 2025 06:50 AM
திருப்பூர்: 'அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் காப்பதில் காண்பிக்கும் அக்கறையை, மூத்த குடிமக்கள் மீதும் காண்பிக்க வேண்டும்' என, 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து பொது பயன்பாட்டு இடங்களிலும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் சிரமமின்றி சென்று வரும் வகையிலும், தங்கள் பணியை எவ்வித சிக்கலுமின்றி செய்து முடிக்கும் வகையிலான கட்டமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 'சிரமம் கொடுக்காதீர்கள்' என்ற தலைப்பில் இதுதொடர்பான செய்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில் வெளியானது.
இதனை சுட்டிக்காட்டி தன்னார்வ பணி செய்து வரும், ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர் பால்ராஜ் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலு வலரின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதேபோல், மூத்த குடிமக்கள் நலன் சார்ந்தும் கவனம் செலுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள், ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் மூத்த குடிமக்கள், நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாமதமின்றி தங்கள் பணியை முடித்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.