/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்!
/
பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்!
ADDED : மே 16, 2025 12:17 AM

திருப்பூர்,; புதிய, 2025 - 2026ம் கல்வியாண்டு ஜூன் முதல் வாரம் துவங்குகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், பள்ளி திறப்பின் போது மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்க தேவையான பணிகளை மாவட்ட கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.
நம் மாவட்டத்தில் ஒன்பது தாலுகாவில் உள்ள, 657 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டுக்கள் தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க கல்வி குழந்தைகளுக்கான புத்தகங்கள் குப்பாண்டாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தேவையான, புத்தகங்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இடுவம் பாளையம் பள்ளியில் இருந்து அந்தந்த தாலுகா குடோன்களுக்கு பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, புத்தகப்பை, காலனி, சீருடை, கணித உபகரணம், மேப், வரைபட புத்தகம் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணி நேற்று துவங்கியது. தாலுகா வாரியாக புத்தக சேகரிப்பு மையத்தில் இறக்கி வைக்கப்படும்
இப்புத்தகங்கள், வரும், 20ம் தேதி முதல், 25ம் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்படும். ஜூன், 2ம் தேதி பள்ளி திறக்கும் நாளில் ஒன்று முதல், பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர், மாணவியர் கைகளிலும் புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் இருக்கும்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தொடக்க பள்ளிகளுக்கு, 2.50 லட்சம் புத்தகம், 1.10 லட்சம் நோட்டு, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு, 1.60 லட்சம் புத்தகங்கள் என மொத்தம், நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருப்பில் உள்ளது. அட்மிஷனுக்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை கணக்கிட்டு புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இரண்டாம் கட்டமாக கூடுதல் புத்தகங்கள் வரவிருக்கிறது,' என்றனர்.