ADDED : டிச 08, 2024 02:44 AM
கருப்பு - வெள்ளை காலம் துவங்கி, கடந்த, 20 ஆண்டுகள் முன்பு வரை, சினிமாக்களுக்கான விளம்பரம் என்பது, சுவர்களை மட்டுமே சார்ந்திருந்தது. வீதி, தெருக்களில் குறிப்பிட்ட இடங்களில், சினிமா போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம். வெள்ளித்திரை மட்டுமே, ரசிகர்களின் பொழுதுபோக்கிடமாக இருந்தது.
தகவல் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியில், தியேட்டர்களில் மட்டுமின்றி, 'ஓ.டி.டி.,'யிலும் சினிமா வெளியிடப்படுகிறது; இது, ரசிகர்களை ஈர்க்கவும் செய்கிறது.
போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை தழுவிய 'அமரன்' சினிமா, தியேட்டரில் மட்டுமின்றி, ஓ.டி.டி.,யிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
ஹரிஹரன், பேச்சாளர், காங்கயம்
சில படங்கள், ஓ.டி.டி.,யில் வெளியிடுவதற்காகவே தயாரிக்கப்படுகின்றன; சில படங்கள், தியேட்டர்களில் திரையிடுவதற்கென தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் 'அமரன்' படத்துக்கு, தியேட்டரிலேயே உரிய மரியாதை, அங்கீகாரம் கிடைத்தது.
தற்போது ஓ.டி.டி.,யில் வெளிவந்திருப்பதன் வாயிலாக, நிறைய பேர் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது; 'டிவி' மொபைல் போன் வாயிலாக சினிமாவை பார்க்கும் போது, கதையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.
முகமது இப்ராகிம், காங்கயம் கிராஸ் ரோடு
திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி, 60 நாளுக்கு பிறகு தான், ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும் என, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தாலும், சில படங்கள், 45, 50 நாட்களில் ஓ.டி.டி.,க்கு வந்துவிடுகிறது.
அமரன் படம், ரிலீஸ் ஆகி, 6வது வாரம் தான் ஓ.டி.டி.,க்கு வந்திருக்கிறது; இது, வரவேற்புக்குரியது தான். பெரும்பாலானவர்களுக்கு, தங்களுக்கு வசதிபடும் அல்லது விரும்பும் நேரத்தில், விரும்பிய தியேட்டருக்கு சென்று படம் பார்க்க இயலாதவர்களுக்கு, ஓ.டி.டி.,யில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சங்கீதா, நெருப்பெரிச்சல்
எங்களை போன்ற வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருக்கும். அன்றைய தினம் வீடுகளில் நிறைய வேலையிருக்கும். குடும்பத்தினருடன் சினிமாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பது அரிது தான்.
அமரன் போன்ற நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்காது. அத்தகைய படங்கள் ஓ.டி.டி.,யில் ரிலீஸ் செய்யப்படுவதன் வாயிலாக, தியேட்டருக்கு செல்ல முடியாத குறையை களைய முடியும்; குடும்பத்துடன் அமர்ந்து, படம் பார்க்க முடியும்.