/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிறைவான பதில்கள் இங்கே குறைவாகவே...!
/
நிறைவான பதில்கள் இங்கே குறைவாகவே...!
ADDED : ஜூன் 22, 2025 12:55 AM
''குறைகேட்பு கூட்டங்களில் எழுப்பும் கேள்விகளுக்கு, அதிகாரிகளிடம் இருந்து பதில்கள் கிடைப்பதில்லை. ஒருவேளை பதில்கள் கிடைத்தாலும், அவை நிறைவற்ற பதில்களாக உள்ளன''
என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.
திருப்பூரில், கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், அந்தந்த ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் கோட்ட அளவிலும், விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாதம், மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை, கலெக்டரிடம் நேரடியாக மனுவாக அளிக்கலாம். வேளாண் துறை சார்ந்த பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசலாம்.
கிடுக்கிப்பிடி கேள்விகள்திணறும் அலுவலர்கள்
கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை, வனத்துறை, நீர்வளம், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை மாசுகட்டுப்பாடு வாரியம் உள்பட அனைத்து அரசு துறை சார்ந்த, மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான துறைகளில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அலுவலர்களே குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். சில நேரங்களில் புதிதாக வந்துள்ள அலுவலர்களை அனுப்பிவைத்து விடுகின்றனர்.
அதனால், குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பும் கேள்விகள், பிரச்னைகளுக்கு, அரசு அலுவலர்களால், தீர்க்கமான மற்றும் சரியான பதிலளிக்க முடியாமல் போகிறது. பல நேரங்களில், விவசாயிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் திணறுகின்றனர். மாவட்ட அளவில் முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்பது விவசாய சங்கங்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
3 மாதங்களுக்கு பின்குறைதீர்ப்பு கூட்டம்
திருப்பூர் வருவாய் கோட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டம் நடைபெறும் அரங்கில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதாலேயே, குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை என, அதிகாரிகள் கூறினர்.
ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கின் ஒரு பகுதி தடுக்கப்பட்டு, அந்த அறையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், மிகச்சிறிய அரங்கிலேயே குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.
கடும் நெருக்கடி காரணமாகவே, விவசாயிகள் பலரும் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்துக்கு வர தயங்கினர்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஸ்ட்ராங் ரூமுக்கு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டன. தடுப்புகள் அகற்றப்பட்டு, கூட்ட அரங்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விவசாய அமைப்பினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, வரும் 25ம் தேதி, கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலையாய கடமை
குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய காலத்தில் தீர்வு ஏற்படுத்தி, உயிர்கள் உய்ய உணவளிக்கும் விவசாயிகளை பாதுகாக்கவேண்டியது, அரசு அதிகாரிகளின் தலையாய கடமை.