/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் குவிந்து கிடக்கும் கழிவால் சுகாதாரமில்லை! காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்
/
கிராமங்களில் குவிந்து கிடக்கும் கழிவால் சுகாதாரமில்லை! காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்
கிராமங்களில் குவிந்து கிடக்கும் கழிவால் சுகாதாரமில்லை! காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்
கிராமங்களில் குவிந்து கிடக்கும் கழிவால் சுகாதாரமில்லை! காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்
ADDED : பிப் 16, 2025 11:28 PM
உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்தவும், குப்பையை தரம் பிரித்து கையாளவும், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம், கடந்த, 2016ல் துவக்கியது. ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப, துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டு, வீடு, வீடாகச்சென்று குப்பையை சேகரித்து, அதனை மக்கும், மக்காத குப்பை மற்றும் கட்டடக்கழிவுகள் என தனித்தனியாக பிரிக்க பயிற்சியளிக்கப்பட்டது.
இதற்காக, பேட்டரி வாகனங்கள், தரம்பிரித்து வாங்குவற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. மக்களிடமிருந்து பெறப்படும், காய்கறி, உணவு உள்ளிட்ட வீட்டுக்கழிவு களை கொண்டு, உரம் தயாரிக்கும் வகையில், உரக்குடில்கள் அமைக்கப்பட்டன.
இங்கு, பெரிய அளவிலான தொட்டிகள் கட்டப்பட்டு, சேகரிக்கப்படும் குப்பை, உயிர்க்கரைசல் கொண்டு, மக்க வைத்து இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டது.
மக்காத, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாயை ஊராட்சி நிதியிலும் சேர்க்க வழிகாட்டுதல் வழங்கினர். திட்டம் துவக்கத்தில், முறையாக அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டது.
தற்போது, வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படாமல் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பையை பயன்படுத்தி, உரம் தயாரிப்பதற்கான, குடில்கள் அனைத்தும் காட்சிப்பொருளாக மாறி விட்டன. அங்கு குவிந்து கிடக்கும் பல வகை கழிவுகளால், சுகாதார சீர்கேடு நிரந்தரமாகி விட்டது.
கிராமங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட திட்டம், ஊராட்சிகளின் அலட்சியத்தால், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் திட்டமாக மாறி வருகிறது.
ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, வழக்கம் போல், பொது இடங்கள், குளம், குட்டைகள், ரோட்டோரம், மயான பகுதி மற்றும் ஊராட்சி எல்லைக்கு வெளியில் உள்ள பகுதிகளில் மலைபோல் கொட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஊராட்சிகளில், குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி ஏற்படுகிறது; தீ வைத்து எரிப்பதால், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. கிராமங்களில், பெரும்பாலும், குளம், குட்டை, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் கொட்டப்படுவதால், மழை பெய்தால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. எனவே, ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், சேகரிக்கப்படும் குப்பை இயற்கை உரமாக மாற்றப்படுவதை உறுதி செய்யவும், ஊராட்சி நிர்வாகங்கள், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண் மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாத நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படும் தொகை குறித்தும் விரிவாக ஆய்வு செய்து, விதி மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.