/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் பணி ஒதுக்கீடு கிடையாது!
/
வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் பணி ஒதுக்கீடு கிடையாது!
வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் பணி ஒதுக்கீடு கிடையாது!
வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் பணி ஒதுக்கீடு கிடையாது!
ADDED : மார் 15, 2025 11:44 PM

திருப்பூர்: தேசிய வேலை உறுதி திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்துக்கான மனித வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது; தனிநபர் பணிகளுக்கு ஒதுக்கீடு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய வேலை உறுதி திட்டம், கடந்த, 2008ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலமாக, கிராமப்புறத்தை சேர்ந்த மக்கள், ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்; தினசரி சம்பளமாக, 319 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குளம், குட்டை துார்வாரும் பணி, ரோடு செப்பனிடும் பணி மட்டும் நடந்து வந்தது. அதன்பின், சிறிய தடுப்பணை அமைப்பது, சிறிய கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது, பெரும் தொகையை செலவழிப்பதால், நிரந்தர சொத்துக்களை உருவாக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது; அதன்படி, கட்டட பணிகளும் நடந்து வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக, வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு, குறு, சிறு விவசாயிகளின் நிலங்களில் பணி மேற்கொள்ளப்பட்டது. பண்ணை குட்டை அமைப்பது, சிறிய வரப்பு அமைப்பது, தென்னை மரத்துக்கு வட்டமாக வரப்பு அமைப்பது, மழைநீர் சேகரிப்பு வரப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன.
வரும் நிதியாண்டில் இருந்து, வேலை உறுதி திட்ட பணி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 35 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்படும் திருப்பூர் மாவட்டத்துக்கு, 12 லட்சம் மனித நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு லட்சத்துக்கும் குறைவான மனித நாட்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும். அதேபோல், இத்திட்டத்தின் மூலமாக அதிக நாட்கள் வேலை பார்த்த தொழிலாளருக்கு மட்டும், முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதாவது, நடப்பு நிதியாண்டில், 90 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு, வரும் ஆண்டில் பணி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். இதேபோல், 80 நாட்கள், 70 நாட்கள், 60 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்; மிக குறைவாக பணியாற்றிய நபர்களுக்கு இனி வேலை வாய்ப்பு, கட்டாயமாகாது; விருப்பத்தின் பேரில் பணியாற்றலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
குறிப்பாக, வரும் ஆண்டில், எவ்வித தனிமனித பணிகளுக்கும், இத்திட்டத்தில் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, அரசு சொத்துக்கள், குளம், குட்டைகளில் மட்டுமே பணி வழங்கப்படும்.
விவசாய நிலங்களில் பணி ஒதுக்கீடு கிடைக்காது என்று, கடந்த சில வாரங்களுக்கு முன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகால் இல்லாத வீடுகளுக்கு, உறிஞ்சு குழி அமைக்கும் பணி மட்டுமே, இத்திட்டத்தில் தனிநபர் பணியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளம், குட்டை துார்வாரும் பணி, மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு, ரோட்டோரத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகள் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வேலை நாள் குறைப்பு
பி.டி.ஓ.,கள் சிலர் கூறியதாவது:
வரும் நிதியாண்டில், வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அரசு உத்தரவுப்படி, தனிநபர் பணிகள் இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படாது என்று தெரிவித்துள்ளனர். மனித நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதிக நாட்கள் பணியாற்றி வரும் தொழிலாளருக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த நிதியாண்டு நிறைவடைய, 15 நாட்களே இருப்பதால், புதிய நிதியாண்டில் பணிகளை துவக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.