மடத்துக்குளம் சுற்றுப்புற கிராம மக்களுக்கு... ரயிலுக்கு ராசியில்லை!:பாழடைந்து வரும் ரயில்வே ஸ்டேஷன்
மடத்துக்குளம் சுற்றுப்புற கிராம மக்களுக்கு... ரயிலுக்கு ராசியில்லை!:பாழடைந்து வரும் ரயில்வே ஸ்டேஷன்
UPDATED : செப் 17, 2026 03:17 AM
ADDED : செப் 16, 2026 05:22 PM

மடத்துக்குளம்: மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்லாததோடு, பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால், வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து இருந்தும், பயன்படுத்தும் வசதியில்லாமல், மக்கள் பாதித்து வருகின்றனர். திண்டுக்கல் -- பாலக்காடு அகல ரயில்பாதையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
தாலுகா தலைநகராகவும், நான்கு பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் என மக்கள் தொகை மற்றும் சர்க்கரை ஆலை, பேப்பர் மில்கள், நுாற்பாலைகள், கறிக்கோழி நிறுவனங்கள் என தொழில்வளர்ச்சி மிகுந்த பகுதியாகவும், திருப்பூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையாகவும் உள்ளது.
திண்டுக்கல் -- பாலக்காடு மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, பயணியர் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து என களைகட்டிய ரயில்வே ஸ்டேஷன், அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில், சென்னை, அமிர்தா எக்ஸ்பிரஸ், திருச்செந்துார், பாலக்காடு, துாத்துக்குடி, மதுரை ரயில்களும், வாராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கோவை- மதுரை ரயில் மட்டுமே மடத்துக்குளத்தில் நின்று செல்கிறது.
தினமும், நான்கு ரயில்கள் வந்து சென்றாலும், எதுவும் நின்று செல்வதில்லை. மடத்துக்குளத்தை சுற்றிலும் வசிக்கும், இரு மாவட்ட மக்களும், ரயில் வசதியை பயன்படுத்த, உடுமலை அல்லது பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
அதே போல், அகலரயில்பாதையாக மாற்றப்பட்ட போது, நடை மேடை, புதிதாக ரயில்வே ஸ்டேஷன், குடிநீர், கழிப்பிடம், பயணியர் அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டன.
ஒரு ரயிலுக்காக இருக்கும் ஸ்டேஷன் என்பதால், மதுரை கோட்ட அதிகாரிகள், தொடர்ந்து இதனை கண்டு கொள்ளாததால், புதர் மண்டியும், மது, கஞ்சா என போதை ஆசாமிகள் புகழிடமாகவும், பிளாட்பார்ம் திறந்த வெளி கழிப்பிடமாகவும் உள்ளது.
இருக்கைகள், குடிநீர் குழாய், கழிப்பறை என அனைத்து கட்டமைப்புகளும், சிதிலமடைந்து, ரயில்வே ஸ்டேஷன் அலங்கோலமாக மாறி வருகிறது.
கோவை- மதுரை ரயில் வரும் போது மட்டும், கமிஷன் அடிப்படை செயல்படும் ஒருவர் வந்து, டிக்கெட் விற்று செல்வதால், ரயில்வே துறையால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்கவும், அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
