/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருக்குறளை போற்றிய திருவள்ளுவர் விழா
/
திருக்குறளை போற்றிய திருவள்ளுவர் விழா
ADDED : ஜன 05, 2025 02:20 AM

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை, மாவட்ட மைய நுாலகம் சார்பில், திருவள்ளுவர் விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டது. முதல் நாளில் விழாவில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, விழாவினை துவக்கி வைத்தார். சூழல் இனிது, யாழ் இனிது, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், குமரியில் வள்ளுவரின் சிலையும் குறளில் அதிகார வைப்பு முறையும் உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சு போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. 'நான் ரசித்த வள்ளுவம்', ' தீதின்றி வந்த பொருள்', 'உழுதுண்டு வாழ்வாரே' உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் நடந்தது.
திருக்குறள் முற்றோதுதல், திருக்குறள் பொருள் சார்ந்த திரைப்பட பாடல், திருக்குறளின் பெருமை தலைப்பில் கவியரங்கம், பாண்டியன்நகர் தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்து நுாலகம் முழுதும் திருக்குறளும், மனமும், தினசரி கமழ்ந்தது.
நிறைவாக, திருப்பூர் மக்கள் மாமன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த, திருக்குறள் அரங்கேற்றம் ஓரங்க நாடகம் நிகழ்வு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொழில்நுட்பங்களே வளராத அந்த காலகட்டத்தில், தன் இயற்றிய திருக்குறளை, அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் பட்ட சிரமம், படிப்பினைகளையும், தமிழின் மேல் அன்றைய அரசன், மக்கள் கொண்டிருந்த அளவில்லா பேரன்பை கண்முன் காட்டுவதாக வியப்பை தந்தது, ஓரங்க நாடக நிகழ்ச்சி.
இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மைய நுாலகம் போன்ற சிறிய அறை, 20 பேருக்கு மேல் அமர முடியாத இடத்தில் நடத்தாமல், வேறு இடங்களில் நடத்தி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பார்வையாளராக பொதுமக்களையும் அனுமதித்தால், திருக்குறளின் பெருமைகளும், சிறப்புகளும் கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவரின் சிலை உயரத்தையும் தாண்டி இன்னமும் செல்லும் என்பது நிதர்சனம்.