/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; பிளாஸ்டிக்கை ஒழிக்காததே காரணம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
/
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; பிளாஸ்டிக்கை ஒழிக்காததே காரணம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; பிளாஸ்டிக்கை ஒழிக்காததே காரணம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; பிளாஸ்டிக்கை ஒழிக்காததே காரணம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
ADDED : செப் 24, 2025 12:21 AM

பல்லடம்; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை நிரந்தரமாக ஒழிக்காததே, திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதற்கு காரணம் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து, அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டி வரும் திருப்பூர் மாநகராட்சி, குப்பை மேலாண்மைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாதது முதல் தவறு. பயன்பாடற்ற பாறைக்குழிகள், கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவதை மாநகராட்சி நிர்வாகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன், பல்லடம், இச்சிப்பட்டி கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரும் போராட்டம் வெடித்தது.
அதேபோல், தற்போது முதலிபாளையம் பகுதியிலும் பொதுமக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு, ஊர் ஊராகச் சென்று குப்பை கொட்டுவதை தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குப்பை மேலாண்மையை கையாள விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இதுதவிர தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி கிடைக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்திலும், தற்போதைய ஆட்சியிலும், பிளாஸ்டிக் பயன்பாடு அளவுக்கதிகமாக உள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிக்காததே, திருப்பூர் மாநகராட்சியின் குப்பை பிரச்னை பூதாகரமானதற்கு முக்கிய காரணம்.
மாநகராட்சியின், 60 வார்டுகளில், தினமும், 800 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இதில், 300 டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகளே இருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நிரந்தரமாக ஒழித்தால் மட்டுமே குப்பை பிரச்னை ஏற்படாது. 'மீண்டும் மஞ்சப்பை' என்று அறிவித்துவிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பரவலாக வினியோகித்து வருவது ஏற்புடையதல்ல. தமிழக அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.