/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இப்படித்தான் இருக்கும் எங்கள் கொண்டாட்டம்
/
இப்படித்தான் இருக்கும் எங்கள் கொண்டாட்டம்
ADDED : அக் 19, 2025 10:48 PM

பு த்தாடை, இனிப்பு, பட்டாசு என தீபாவளி என்றாலே, குட்டீஸ் மட்டுமின்றி பெரியவர்களுக்குக் கூட உள்ளத்தில் மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுக்கிறது. தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்தவர்களின் கருத்துகள்:
புத்தாடை, இனிப்பு வாங்கிக் கொடுத்தேன் சரவணன், கட்டட தொழிலாளி, ஆலத்துார், சேவூர்:
மில், கம்பெனி தொழிலாளர் போல நிலையான மாத சம்பளம், போனஸ் எங்களுக்கு கிடைக்காது. தினமும் செய்யும் வேலைக்கேற்ப சம்பளம் பெறுவோம். நல்லுள்ளம் படைத்த சிலர் தீபாவளி காலத்தில் போனஸ் கொடுப்பர். அதை வைத்து பிள்ளைகளுக்கு பட்டாசு, இனிப்பு, பலகாரம், வாங்கிக் கொடுப்பேன். இந்த ஆண்டு புதிதாக எங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு புத்தாடை, இனிப்பு வாங்கிக் கொடுத்தேன். வீட்டில் பலகாரம் செய்து, இனிப்பு வழங்கி தீபாவளியைக் கொண்டாடுவோம்.
மழை பெய்ததால் மட்டற்ற மகிழ்ச்சி மூர்த்தி, விவசாயி, செல்லப்பம்பாளையம்:
பாரம்பரிய முறைப்படி காலை எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சாமி தரிசனம் முடித்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவோம். இந்த நாளில் நன்றாக ஓய்வெடுப்போம். விவசாயத்தில் முக்கியமான வேலை இருந்தால் மட்டும் அதை செய்வோம். எங்கள் தோட்டத்துக்கு வரும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு போனஸ், இனிப்பு, பட்டாசு, புத்தாடை கொடுத்து ஊக்குவிப்போம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் தீபாவளி மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பசுமைத் தீபாவளி கொண்டாடுவேன் ரேவதி, மாணவி, சிக்கண்ணா அரசுக்கல்லுாரி:
இந்த ஆண்டு 'பசுமை தீபாவளி' கொண்டாடப் போகிறேன். அதிக புகை மற்றும் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க மாட்டேன். உறவுகளைப் பார்த்து பேசி, வீட்டில் செய்த பண்டங்களை பிறருக்கு வழங்கி, கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி தீபஒளித்திருநாளாக கொண்டாடப்போகிறேன்.
குடும்பத்தினருக்காக உழைப்பதில் மகிழ்ச்சி மணிமேகலை, இல்லத்தரசி, அவிநாசி:
நாங்களும், பிள்ளைகளும் எழுந்து, எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிவோம். காலை உணவிற்கு இட்லி சுடுவோம். வீட்டில் இனிப்பு, காரம் என்று ஸ்பெஷலாக ஏதாவது செய்வோம். மற்ற நாட்களை விட வேலை அதிகமாக இருந்தாலும் நம் குடும்பத்திற்கு செய்வதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். ஹேப்பி தீபாவளி.
உதவிகரமாக இருத்தல் பண்டிகைக்கு சிறப்பு நவீன்குமார், மாணவர்,சிக்கண்ணா அரசுக்கல்லுாரி:
பட்டாசு வெடித்துக்கொண்டாடுவது மட்டுமே தீபாவளியல்ல; வேறு நற்செயல்களையும் புரியலாம். இயலாத மனிதர்களுக்கு உதவு வதுதான் நிஜத்தீபாவளி. தீப ஒளியோடு, இனிப்பு வழங்கி பசுமையாக கொண்டாடலாம்!