ADDED : ஜன 23, 2026 05:41 AM
'இது நம்ம ஆட்டம் - 2026'
வரும் 25ம் தேதி முதல் விளையாட்டு போட்டிகள் துவக்கம்
திருப்பூர்: 'இது நம்ம ஆட்டம் - 2026' விளையாட்டு போட்டிகள், வரும் 25ல் துவங்குகின்றன. திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள், நாளைக்குள் பதிவு செய்து, போட்டிகளில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில், ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில், 'இது நம்ம ஆட்டம் - 2026' என்கிற பெயரில், விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒன்றிய அளவிலும்; 30ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை மாவட்ட அளவிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒன்றிய அளவில், ஆண், பெண் இருபாலருக்கும் தடகளம், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல்; ஆண்களுக்கு மட்டும் ஸ்ட்ரீட் கிரிக்கெட், பெண்களுக்கு மட்டும் எறிபந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில், தடகளம், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஓவியம், கோலம், ஸ்ட்ரீட் கிரிக்கெட், எறிபந்து போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் வெற்றிபெறுவோருக்கு, மாநில அளவில், ஸ்ட்ரீட் கிரிக்கெட், கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி எஸ்.கே.எல் மெட்ரிக், திருப்பூரில் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, ஊத்துக்குளியில் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, பல்லடத்தில் அரசு ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலுாரில் பி.வி.கே.என். மேல்நிலைப்பள்ளி.
தாராபுரம் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனுார் அரசு மேல் நிலைப்பள்ளி, உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி. மடத்துக்குளத்தில், கணியூர் எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. காங்கயம், நத்தக்காடையூர் அரசு பள்ளி, நத்தக்காடையூர் காங்கயம் இன்ஸ்டிடியூட், முத்துார் அரசு பள்ளி ஆகிய இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில், 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங் கனைகள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள், www.sdat.tn.gov.in/ www.cmyouthfestival.sdat.in என்ற இணைதளத்தில், நாளை (24ம் தேதி) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். இதுவரை, மாவட்டத்தில், 2,896 பேர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். மேலும் தகவல்களுக்கு, திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, திருப்பூர் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். 'ஆடுகளம்' செயலி வாயிலாகவும், 95140 00777 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
போட்டி நாட்களில், காலை, 10:00 மணிக்குள் பங்கேற்கவேண்டும்; இல்லையென்றால், அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு, முதல் பரிசு தலா 3 ஆயிரம்; இரண்டாம் பரிசு 2 ஆயிரம்; மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு, முதலிடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய்; இரண்டாமிடத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்; மூன்றாமிடம் பிடிப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய்.
மாநில அளவிலான குழு போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல்பரிசு 75 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு 50 ஆயிரம்; மூன்றாவது பரிசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

