/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளம், குட்டை துார்வார இதுவே தக்க தருணம்
/
குளம், குட்டை துார்வார இதுவே தக்க தருணம்
ADDED : ஏப் 14, 2025 11:23 PM
திருப்பூர்; கோடை துவங்கவுள்ள நிலையில் தரைதட்டிய குளம், குட்டைகளை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார் வாரி, அடுத்து வரும் பருவமழை சமயங்களில் அதில் நீர் நிரம்பும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் ஆண்டு மழைப் பொழிவு என்பது, பிற இடங்களை ஒப்பிடுகையில் குறைவு தான். அவிநாசி உள்ளிட்ட பல இடங்களில் மானாவாரி விவசாய பரப்பு அதிகம். மக்களுக்கான குடிநீர், விளைநிலங்களுக்கான தண்ணீர் தேவை என்பது, மழையை சார்ந்தே இருப்பதால், பருவமழையை எதிர்பார்த்தே விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர்.
மழைநீர் சேமிக்கஉதவும்
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் குளம், குட்டைகள் அதிகளவில் உள்ளன. மழையின் போது, அவற்றில் நிரம்பும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
விவசாய நிலங்களுக்கான தண்ணீர் தேவையும் தன்னிறைவு பெறுகிறது. நன்கு துார்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்ட குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர் மழை ஓய்ந்த பின்பும் கூட, சில மாதங்கள் வரை, அதில் தங்கி நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
விவசாயிகள்எதிர்பார்ப்பு
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கிராம ஊராட்சிகளில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், குளம், குட்டைகள் துார்வாரப்பட்டதன் விளைவாக, பல ஆண்டுகளாக நிரம்பாத குளம், குட்டைகள் கூட நிரம்பி ததும்பின.
இது, மக்களின் தண்ணீர் தேவையை வெகுவாக பூர்த்தி செய்தது; ஊரெங்கும் பசுமை தென்பட்டது. 'இந்தாண்டு, கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் தரை தட்டிய மற்றும் புதர்மண்டிய குளம், குட்டைகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார் வாரி, சுத்தம் செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக கோடை முடிந்து துவங்கும் பருவ மழையின் போது, அதில் நீர் நிரம்பவும், அதன் வாயிலாக கிராமங்கள் செழிக்கவும் உதவியாக இருக்கும்' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக கால்வாய்களில் வளர்ந்துள்ள செடி, கொடி, முட்புதர்களை அகற்றுதல், கால்வாய்களை துார்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு சட்டங்களை பழுது பார்த்தல், மடைகளை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.