ADDED : ஏப் 16, 2026 03:28 AM

திருப்பூர்: ''தேர்தல் நாளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,822 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் அந்தந்தத் தொகுதிகளில் நடைபெற்றன.
இணைப்பு வரிசை: வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைக்கும்போது, முதலில் வாக்குப்பதிவு கருவி (பேலட் யூனிட்) + விவிபேட், அதன்பிறகு விவிபேட் + கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்) என்ற வரிசையில் மட்டுமே இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நேரக் கட்டுப்பாடு: 22ம் தேதி (மதியம் 12:00 மணிக்குள்): ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும்.
23ம் தேதி (காலை 5:45 மணி): மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை: அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நடைபெறும்.
அலுவலர்களின் பணிகள்: பதிவு அலுவலர் - - 1: வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்த்து, பட்டியலில் உள்ள வரிசை எண்ணை உரக்கக் கூற வேண்டும்.
பதிவு அலுவலர் -- 2: வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து, 17ஏ படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து கையொப்பம் பெற வேண்டும்.
பதிவு அலுவலர் -- 3: வாக்காளரிடம் அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு கருவியில் (கன்ட்ரோல் யூனிட்) பட்டனை அழுத்தி வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
தலைமை அலுவலர்: ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை மொபைல் செயலியில் பதிவேற்ற வேண்டும்.
கட்டுப்பாடு: வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க எக்காரணம் கொண்டும் யாரையும் அனுமதிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கறாராக உத்தரவிட்டுள்ளது.
