/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையில் குளிக்க செல்பவர்களே... 'ரிஸ்க்' வேண்டாங்க! நீர் மட்டம் குறைந்துள்ளதால் அபாயமிருக்கு
/
திருமூர்த்தி அணையில் குளிக்க செல்பவர்களே... 'ரிஸ்க்' வேண்டாங்க! நீர் மட்டம் குறைந்துள்ளதால் அபாயமிருக்கு
திருமூர்த்தி அணையில் குளிக்க செல்பவர்களே... 'ரிஸ்க்' வேண்டாங்க! நீர் மட்டம் குறைந்துள்ளதால் அபாயமிருக்கு
திருமூர்த்தி அணையில் குளிக்க செல்பவர்களே... 'ரிஸ்க்' வேண்டாங்க! நீர் மட்டம் குறைந்துள்ளதால் அபாயமிருக்கு
ADDED : மே 12, 2024 11:27 PM

உடுமலை:கோடை விடுமுறையையொட்டி, திருமூர்த்தி மலையில், சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர்; அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அணைப்பகுதியில் கண்காணிப்பு குழு நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, திருப்பூர் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலமாக உள்ளது.
அடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவில்; மலையில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம் என சுற்றுலா பயணியர் நாள் முழுவதும் பொழுதுபோக்கும் வகையில், பல்வேறு சிறப்பம்சங்கள் அங்கு உள்ளன.
வறட்சியால் மாற்றம்
இந்தாண்டு கோடை மழையானது, மலைத்தொடரில் தீவிரம் அடையவில்லை. இதனால், ஆண்டு முழுவதும் சீரான நீர் வரத்து இருக்கும், பஞ்சலிங்க அருவி, தண்ணீரின்றி பரிதாப நிலையில் காணப்படுகிறது.
இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட பிற மாநில சுற்றுலா பயணியரும், கோடை விடுமுறையை கொண்டாட திருமூர்த்திமலையில் குவிந்து வருகின்றனர்.
அருவிக்கு செல்பவர்கள் அங்கு தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். மேலும், கோவில் அருகிலுள்ள ஆற்றிலும், திருமூர்த்தி அணையிலும் குளிக்க முயல்கின்றனர்.
உயிரிழப்பு அதிகம்
திருமூர்த்தி அணையில், யானை கெஜம் உள்ளிட்ட இடங்களில், அபாயம் தெரியாமல், குளித்த சுற்றுலா பயணியர், உயிரிழந்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது.
இதனால், சில ஆண்டுகளுக்கு முன் அணைப்பகுதிக்குள் யாரும் செல்லாத வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கம்பி வேலி அமைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.
படகுத்துறை முதல் கோவில் வரை, அமைக்கப்பட்ட வேலி தற்போது பல இடங்களில், சேதமடைந்துள்ளது. இதனால், அணையில் அபாயம் தெரியாமல், குளிக்க செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நீர் மட்டம் குறைவு
திருமூர்த்தி அணையை துார்வாரும் வகையில், நீர் தேக்க பரப்பிலுள்ள வண்டல் மண் குறிப்பிட்ட இடைவெளியில் அகற்றப்பட்டு வருகிறது.
பல இடங்களில், அதிகளவு மண்ணை அள்ளி துார்வாரியுள்ளதால், அவ்விடங்களில், பெரிய குழிகளும், தண்ணீரில் அடித்து வரும் மணல் தேங்கி, சுழல்களும் உருவாகியுள்ளன.
இவ்விடங்களில் குளிக்க செல்பவர்களுக்கு நீச்சல் தெரிந்தாலும், தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம், 60 அடிக்கு, 20.87 அடியாக குறைந்துள்ளது. எனவே, அணையில் நீண்ட துாரத்துக்கு சென்று சுற்றுலா பயணியர் குளிக்கச்செல்கின்றனர்.
கண்காணிப்பு தேவை
அணைப்பகுதியில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த சீசனில், கண்காணிப்பு குழு அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைப்பகுதியில் அக்குழுவினர் ரோந்து சென்று, குளிப்பவர்களை எச்சரித்து அனுப்புவதுடன், சுற்றுலா பயணியரிடையே அணையில் குளிப்பதில் உள்ள அபாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், அத்துமீறல்களால் அணைப்பகுதியில், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அணைக்கரையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், குப்பையை கொட்டுவதை தவிர்க்கவும் கண்காணிப்பைதீவிரப்படுத்துவது அவசியமாகும்.