ஆட்டோவை எரித்த வழக்கில் வி.சி., நிர்வாகிகள் மூவருக்கு சிறை
ஆட்டோவை எரித்த வழக்கில் வி.சி., நிர்வாகிகள் மூவருக்கு சிறை
ADDED : செப் 18, 2026 06:54 AM
பெருந்துறை:ஈரோடு
மாவட்டம் பெருந்துறையை அடுத்த திங்களூர் பிரப் நகரை சேர்ந்தவர்
ரிச்சர்ட், 42; பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
பகுதி ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அதே பகுதியில் வாடகைக்கு
புதியதாக ஆட்டோ இயக்க வந்த பெருந்துறை சிலேட்டர் நகர் மெல்வின்
கிங்ஸ்டன், 36, மேத்யூ, 32, நிச்சாம்பாளையம் விஜயபாலன், 50, ஆகியோரை
ரிச்சர்ட் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர் மீது மூவரும் ஆத்திரம்
அடைந்தனர். இந்நிலையில், 2019 அக்.,25ல் ரிச்சர்ட் ஆட்டோவை மூவரும்
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். ரிச்சர்ட் புகாரின்பேரில் விசாரணை
நடத்திய பெருந்துறை போலீசார், மூவரையும் கைது செய்தனர்.இது
தொடர்பான வழக்கு பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில்
நீதிபதி அஷ்வக் அகமது நேற்று தீர்ப்பளித்தார். முன்விரோதத்தில்
ஆட்டோவை தீ வைத்து எரித்த மூவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனை, 10
ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்
திருமலை, கலைச்செல்வி ஆஜராகினர்.
தண்டனை விதிக்கப்பெற்ற
விஜயபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், பெருந்துறை தொகுதி
செயலாளராக உள்ளார். மெல்வின் கிங்ஸ்டன், மேத்யூ விடுதலை சிறுத்தைகள்
கட்சி நிர்வாகிகளாக உள்ளனர்.
