தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாக்கு எண்ணும் மையத்துக்குமூன்று அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்துக்குமூன்று அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்துக்குமூன்று அடுக்கு பாதுகாப்பு


ADDED : ஏப் 23, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டன. 'விவிபேட்' சீட்டுகள் மற்றும் தேர்தல் ஆவணங்களும் பாதுகாப்பாகப் பெட்டிகளில் அடுக்கப்பட்டன. மண்டல அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட இந்த இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுாரிக்குக் கொண்டு செல்லப்பட்டன. விடிய விடிய இந்த இடமாற்றப் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில், 8 தொகுதிகளுக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு அறைகள் (ஸ்ட்ராங் ரூம்) தயார் செய்யப்பட்டிருந்தன. அங்கு வந்த இயந்திரங்களை அதிகாரிகள் சரிபார்த்து, வரிசைப்படி அடுக்கி வைத்தனர்.

அனைத்து இயந்திரங்களும் வைக்கப்பட்ட பின், பாதுகாப்பு அறைகள் சீல் வைக்கப்பட்டன. வரும் மே மாதம் 4-ம் தேதி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த அறைகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதுவரை அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.

---: வேட்பாளர் விவரம் 'கிழிப்பு'

வாக்காளர் அதிருப்தி

திருப்பூர்: வாக்காளர்கள் வேட்பாளர்களைத் தெரிந்துகொள்ள ஓட்டுச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸில்,காங்கயம் அடுத்த களிமேடு 'பிங்க் பூத்'தில் சுயேட்சை வேட்பாளர்களின் விவரங்கள் கிழிந்த நிலையில் இருந்தன. 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், தங்கள் பெயர் மற்றும் சின்னம் சேதமடைந்திருப்பதைக் கண்டு வேட்பாளர்களும், வாக்காளர்களும் அதிருப்தி அடைந்தனர்.

வாக்களித்து முடித்த கையோடு, தி.மு.க. வேட்பாளர் சாமிநாதன், காங்கயம் நகரப் பகுதியிலும், அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ் சென்னிமலை ஊராட்சிப் பகுதியிலும் 'ரவுண்ட்ஸ்' வந்தனர். ஒவ்வொரு பூத்தாகச் சென்று, நிலவரம் எப்படி இருக்கு? எவ்வளவு ஓட்டு பதிவாகியிருக்கு? எனத் தங்கள் கட்சி ஏஜென்ட்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

--

வாக்கு இயந்திரம் 'மக்கர்'

ஓட்டுப்பதிவு நிறுத்தம்

காங்கயம்: காங்கயத்தில் ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில் ஓட்டுச்சாவடி எண் - 113 வரதப்பம்பாளையம், ஓட்டுச்சாவடி எண் - 137 பொத்தியபாளையம் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இரண்டு ஓட்டுச்சாவடிகளிலும், 8:05 முதல் 8:20 வரை ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. அதுவரை வாக்காளர்கள் காத்திருந்தனர். வேறு மெஷின் மாற்றப்பட்டு, பின் ஓட்டுப்பதிவு துவங்கப்பட்டது.

---

ஓட்டு போட முடியாமல்

ஆசிரியர் ஏமாற்றம்

திருப்பூர்: திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சிப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராமகிருஷ்ணன். நேற்று தனது ஓட்டைப் பதிவு செய்ய கருவம்பாளையம் மாநகராட்சிப் பள்ளி வாக்குச்சாவடிக்கு அடையாள அட்டையுடன் சென்றார்.

அங்கு வாக்காளர் பட்டியலில் இவரது பெயருக்கு நேராக 'தபால் ஓட்டு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட அலுவலர்கள், அவர் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதி மறுத்துவிட்டனர். எனக்குத் தேர்தல் பணியும் வரவில்லை, தபால் வாக்கும் வழங்கப்படவில்லை; அப்படியிருக்க பட்டியலில் எப்படி தபால் ஓட்டு என வரலாம்? என்று அவர் முறையிட்டும் பலனில்லை.

ராமகிருஷ்ணன் கூறுகையில், எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பட்டியலில் எனக்கு மட்டும் தேர்தல் பணி உத்தரவு வரவில்லை. அதனால் நேரடியாக வாக்களிக்கச் சென்றால், அங்கும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளேன், என்றார்.

--

மொபைல்போன் பாதுகாப்பு வாக்குச்சாவடிகளில் குளறுபடி

திருப்பூர்: வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் வாக்காளர்களின் மொபைல் போன்களைப் பாதுகாக்க சணல் பைகள் தயார் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், போதிய தன்னார்வலர்கள் நியமிக்கப்படாததால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது. பல மையங்களில் காலை 9:00 மணி வரை வாக்காளர்கள் தடையின்றி மொபைல் போன்களை உள்ளே எடுத்துச் சென்றனர். அதன் பின்னரே போலீசார் தடுக்கத் தொடங்கினர். குறிப்பாக, பல்லடம் தொகுதியின் மங்கலம், இடுவாய் மற்றும் திருப்பூர் தெற்கின் கே.என்.பி. காலனி போன்ற இடங்களில் மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைக்க எவ்வித ஏற்பாடும் இல்லை. ஒருபுறம் வாக்காளர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், மறுபுறம் வேட்பாளர்களின் முகவர்கள் தடையின்றி மொபைல்களைப் பயன்படுத்தியது வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மொபைல் போன்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யாத ஓட்டுச்சாவடிகளில், போர்டிகோ மற்றும் பெஞ்ச் எடுத்து வந்து, அதன்மீது மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்டன; டோக்கன் வழங்கும் முறை, ஒரு சில இடங்கள் தவிர வேறு எங்குமே இல்லை. பாதுகாப்பு மையம் இருக்குமென, மொபைல்போன் எடுத்துவந்த வாக்காளர்கள், கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

--

சக்கர நாற்காலி... தவித்த மூதாட்டி

அவிநாசி. ஏப். 24-: அவிநாசி தொகுதி, குட்டகம் ஓட்டுச்சாவடிக்குத் தன் மகனுடன் டூவீலரில் வந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர், ஓட்டுப் போட முடியாமல் 20 நிமிடங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

அங்கிருந்த புதிய சக்கர நாற்காலியின் 'பேக்கிங்' பிரிக்கப்படாமல் இருந்ததோடு, அதனை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் அலுவலர்கள் திணறினர்.

பிறகு போலீசாரின் உதவியுடன் ஒருவழியாகப் பேக்கிங் பிரிக்கப்பட்டு, சிரமத்திற்கு இடையே மூதாட்டி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு வாக்களித்தார்.

தொகுதியின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின.

வடுகபாளையம் (எண்: 175): மதியம் அரை மணி நேரம் இயந்திரம் பழுதானதால், முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

தண்டுக்காரன்பாளையம் (எண்: 183): இரண்டு முறை தலா ஒரு நிமிடம் கோளாறு ஏற்பட்டுச் சரி செய்யப்பட்டது.

தாசராபாளையம் (எண்: 842): காலை 7:00 மணிக்கே இயந்திரம் மக்கர் செய்ததால், 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

புஞ்சை தாமரைக்குளம் (எண்: 169): காலை 10:30 மணி முதல் 20 நிமிடங்கள் இயந்திரப் பழுதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் தொடங்கியது.

---

காங்கயம் ரவுண்டானா

'வெறிச்'சோடியது

காங்கயம்: சட்டசபை தேர்தலையொட்டிப் பொது விடுமுறை அளிக்கப்பட்டதால், காங்கயம் நகரமே நேற்று ஆள் அரவமற்று வெறிச்சோடிக் காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, மார்க்கெட் வீதி மற்றும் கோவை ரோடு பகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் திறக்கப்படாததால், வெளியூர் பயணிகள் உணவின்றித் தவித்தனர். மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முக்கியச் சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் நிசப்தமாகக் காணப்பட்டன.

---

யார் மனசுல யாரு? ஓயாது 'விவாதம்'

திருப்பூர்: ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் ஜனநாயகத் திருவிழா நேற்று வழக்கத்தை விடக் கூடுதல் உற்சாகத்துடன் நடந்து முடிந்தது. காலை 7:00 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களின் முகத்தில் 'கடமையைச் செய்துவிட்டோம்' என்கிற நிம்மதியே மேலோங்கி நின்றது.

யார் மனநிலை என்ன? n கட்சி நிர்வாகிகள்: நம்ம ஏரியா ஓட்டு சிதறக்கூடாது என்கிற சுறுசுறுப்பில் வெளியூர் சொந்தங்களை வரவழைப்பது முதல் பூத் சிலிப் கொடுப்பது வரை பம்பரமாய் சுழன்றனர். அவர்களுக்கு இது தேர்தல் அல்ல, ஏரியாவின் 'கவுரவம்'.

n மூத்த வாக்காளர்கள்: நாங்க கருணாநிதி, எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே ஓட்டுப் போடுறோம் என்ற பெருமிதத்தோடு வந்த பெரியவர்கள், யார் வந்தா என்ன, விலைவாசி குறைஞ்சு நிம்மதியா வாழணும் என்கிற யதார்த்த எதிர்பார்ப்புடன் வாக்களித்தனர்.

n நடுத்தர வர்க்கம்: ஊடகங்கள் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை அலசி ஆராய்ந்து வந்த இவர்கள், இலவசங்களைத் தாண்டி குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலக் கட்டமைப்பை விவாதித்துக் கொண்டே வரிசையில் நின்றதைக் காண முடிந்தது.

n இளைய தலைமுறை: இவர்கள்தான் நேற்றைய 'ஸ்டார்'கள். வேட்பாளர்களை விடத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பை முன்னிறுத்தும் கட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.

வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவு வெளியாகும் வரை ஒவ்வொரு வீட்டுத் திண்ணைகளிலும் இந்த 'அரசியல் விவாதம்' மட்டும் ஓயப்போவதில்லை.

---

ஓட்டு போட்ட மர்ம நபர்கள்

த.வெ.க.வினர் ஆவேசம்

பல்லடம்: பல்லடம் அருகே அடுத்தடுத்து மூன்று பேரின் ஓட்டுகளை வேறு யாரோ போட்டுச்சென்றதால், த.வெ.க.வினர் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

குப்பாண்டம்பாளையம் ஓட்டுச்சாவடிக்கு வந்த சரவணன்,47 என்பவரிடம், உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகிவிட்டது என அதிகாரிகள் கூறினர். விசாரணையில், இன்னொரு சரவணன் என்பவர் பெயர்க் குழப்பத்தில் இவரது ஓட்டைப் போட்டது தெரிந்தது. இதேபோல், முதன் முறை வாக்காளர் நர்மதா என்பவரின் ஓட்டையும், வித்யாலயம் பகுதியில் மற்றொரு பெண்ணின் ஓட்டையும் மர்ம நபர்கள் போட்டுச் சென்றனர்.

தகவலறிந்து திரண்ட த.வெ.க.வினர், சரியான பதில் சொல்லாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். தவறாகப் போடப்பட்ட ஓட்டுகளை நீக்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை 'டெண்டர்' முறையில் ஓட்டளிக்கச் சொல்வது எப்படிச் சரியாகும்? என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த மையத்தில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

---

வாக்குப்பதிவில் புதிய வரலாறு!

திருப்பூர்: தீவிர வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் சிறப்புத் திருத்த நடவடிக்கைகளின் அதிரடிப் பலனாக, திருப்பூர் மாவட்டம் இதுவரை கண்டிராத வகையில் 88.74 சதவீத வாக்குப்பதிவை எட்டி, புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

களத்தில் 116 வேட்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபைத் தொகுதிகளில் மொத்தம் 116 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 2,822 ஓட்டுச்சாவடிகளில், 9,57,453 ஆண்கள், 10,26,178 பெண்கள் மற்றும் 251 திருநங்கைகள் என மொத்தம் 19,83,882 வாக்காளர்கள் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிகாலையிலேயேஆர்வம் காலை 6:00 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முடிந்ததுமே, 6:30 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் குவியத் தொடங்கினர். சரியாக 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. ஆவணச் சரிபார்ப்பு, விரலில் அழியாத மை என முறைப்படித் தங்கள் ஜனநாயகக் கடமையை மக்கள் ஆர்வத்துடன் ஆற்றினர்.

ராக்கெட் வேகத்தில்ஓட்டுப்பதிவு வாக்குப்பதிவு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

காலை 9:00 மணி: 20.38 சதவீதம்.

காலை 11:00 மணி: 42.45 சதவீதம்.

மதியம் 1:00 மணி: 62.97 சதவீதம். இந்த நேரத்தில் 65.58 சதவீதத்துடன் திருப்பூர் தெற்கு முதலிடத்தில் இருந்தது. அவிநாசி (64.96%), காங்கயம் (64.77%), பல்லடம் (64.74%), தாராபுரம் (62.06%) என மற்ற தொகுதிகளும் போட்டி போட்டன. உடுமலை (60.69%) மற்றும் மடத்துக்குளம் (59.97%) சற்று பின்தங்கியிருந்தன.

வெயிலையும்வென்ற சாதனை வழக்கமாக வெயில் ஏற ஏற வாக்குப்பதிவு குறையும். ஆனால், நேற்று மதியம் 3:00 மணிக்கே 75.38 சதவீதத்தை எட்டி, முந்தைய சாதனைகளைத் தகர்த்தது. அப்போது காங்கயம் 78.31 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. அவிநாசி மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகள் 77.43 சதவீதத்துடன் சமநிலையில் இருந்தன.

மாலை நேர 'மெகா' ஹிட் மாலை 5:00 மணிக்கு 86.33 சதவீதத்தை எட்டிய வாக்குப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்த போது 88.74 சதவீதம் என்ற இமாலய இலக்கை எட்டியது. மொத்தம் 17.60 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

70 சதவீதத்தைத் தொடுவதே பெரிய சவாலாக இருந்த திருப்பூர் மண்ணில், இப்போது 88.74 சதவீதம் என்பது ஜனநாயகத்தின் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

---

கடிகார முள்ளோடு ஒரு 'வாக்கு' யுத்தம்

திருப்பூர்: நேரம் மாலை 5:58. படியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாசலில் இருந்த இரும்பு கேட் இன்னும் சில நொடிகளில் மூடப்படத் தயாராக இருந்தது. அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது...

'சார்... ஒரு நிமிஷம் சார்' பஸ் ஸ்டாப்பில் இருந்து குழந்தையைத் துாக்கிக்கொண்டு மூச்சிறைக்க ஓடிவந்தார் பூவிழி.

'குழந்தையைத் தூக்கிட்டு பஸ் ஏறி வர நேரமாகிடுச்சுங்க' என அவர் பதற்றத்துடன் சொல்ல, வாசலில் நின்றிருந்த போலீசார் புன்னகையுடன் அவரை வரவேற்றனர்.

'பதறாதீங்கம்மா... நீங்க வாசலுக்குள்ள வந்துட்டீங்க, இனி நிம்மதியா ஓட்டுப் போடலாம்' என போலீசார் ஆசுவாசப்படுத்த, ஒரு வழியாக பூத்துக்குள் நுழைந்தார். சரியாக 6:00 மணிக்கு தன் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியே வந்த பூவிழியிடம் அத்தனை நிம்மதி!

சொந்த ஊரு ஈரோடு பக்கம் கொடுமுடிங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போனேன். இன்னைக்குப் பார்த்து பஸ் வேற சரியா இல்லை. கொடுமுடில இருந்து காங்கயம் வந்து, அங்கிருந்து இன்னொரு பஸ் மாறி இங்க வர்றதுக்குள்ள உயிரே போயிடுச்சு. ஒரு நிமிஷம் தாமதமாயிருந்தாலும் அஞ்சு வருஷக் கடமை வீணாகியிருக்கும். இப்போதான் மனசுக்கு நிறைவா இருக்கு என அந்த ஒரு நிமிடப் போராட்டத்தை நெகிழ்ச்சியுடன் விவரித்தார் பூவிழி.

--: சாதனை படைத்தது எப்படி?

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் 88.74 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வுக்குப் பின்னால் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட 'சுருக்கமுறை திருத்தம்' மற்றும் 'எஸ்.ஐ.ஆர்' எனும் தீவிர களப்பணியே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சவாலாக இருந்த இரட்டைப் பதிவு பின்னலாடை நகரமான திருப்பூரில் வெளியூர் தொழிலாளர்கள் அதிகம் என்பதால், சொந்த ஊர் மற்றும் திருப்பூர் என இரண்டு இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது பெரும் சவாலாக இருந்தது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 70 சதவீத வாக்குப்பதிவைத் தொடுவதே குதிரைக்கொம்பாக இருந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 70.12% மற்றும் 2024 லோக்சபா தேர்தலில் 70.57% மட்டுமே பதிவாகியிருந்தது.

எஸ்.ஐ.ஆர் கொடுத்த 'ஷாக்' ட்ரீட்மென்ட் வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த 2025 இறுதியில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதிரடி நீக்கம்: இரட்டைப் பதிவு, இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என அதிரடியாக 5.63 லட்சம் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இது மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 23 சதவீதம் ஆகும்.

புதிய பட்டியல்: 24.44 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, வடிகட்டப்பட்டு 19.55 லட்சமாகச் செம்மைப்படுத்தப்பட்டது.

தற்போதைய நிலவரம்: தேர்தலுக்கு முன் புதிய சேர்க்கை மற்றும் நீக்கங்களுக்குப் பிறகு, 19,83,882 வாக்காளர்களுடன் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

சாதனைக்குக் காரணமான 3 'பிளான்'கள் வடிகட்டப்பட்ட பட்டியல்: போலிகள் நீக்கப்பட்டதால், உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை துல்லியமானது.

கூடுதல் சாவடிகள்: ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

அடிப்படை வசதிகள்: அக்னி வெயில் வாட்டியபோதும், சாமியானா பந்தல், குடிநீர் வசதிகள் கச்சிதமாக இருந்ததால் மக்கள் சளைக்காமல் வந்து வாக்களித்தனர்.

18.5 சதவீதம் கூடுதல் எழுச்சி செம்மையான வாக்காளர் பட்டியல் மற்றும் தொடர் விழிப்புணர்வு காரணமாக, முந்தைய தேர்தல்களை விட இந்த முறை 18.5 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர். 17.60 லட்சம் பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதன் மூலம், திருப்பூர் மாவட்டம் தமிழகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us