/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முப்பொழுதும் அப்போது... 'சீசன்' மட்டும்தான் இப்போது!
/
முப்பொழுதும் அப்போது... 'சீசன்' மட்டும்தான் இப்போது!
முப்பொழுதும் அப்போது... 'சீசன்' மட்டும்தான் இப்போது!
முப்பொழுதும் அப்போது... 'சீசன்' மட்டும்தான் இப்போது!
ADDED : பிப் 03, 2024 11:42 PM

அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 250 பாத்திர உற்பத்திப்பட்டறைகள் உள்ளன.
இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தியாகின்றன.
முன்பு திருமணத்தின்போது சீதனமாக அதிகளவில் பாத்திரங்களை கொடுப்பர். ஆனால் தற்போது, மின்னணுப் பொருட்களைத்தான் பெருமளவு சீதனமாக கொடுக்கின்றனர். அதுபோல் பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள் வரத்தாலும் பாத்திரத்தின் பயன்பாடு குறைந்துள்ளது.
இதனால் பாத்திர உற்பத்தி 'சீசன்' உற்பத்தியாக மாறி உள்ளது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் முன்பு தண்ணீர் பிடித்து வைக்க பானை, தண்ணீர் குடிக்க டம்ளர், செம்பு, சாப்பிட தட்டு மற்றும் சமையல் பாத்திரம் என அதிக அளவில் பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, பீங்கான், பிளாஸ்டிக் என பல்வேறு மாற்று பொருட்கள் வரத்தால், பாத்திர உற்பத்தி அந்தந்த காலத்திற்கேற்ப சீசன் உற்பத்தியாக மாறி உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி பெரும்பான்மையான பட்டறைகள் பொங்கல் பானை மற்றும் அதன் தொடர்புடைய வாணா சட்டி, கரண்டி ஆகியவை உற்பத்திக்கு பல ஊர்களில் இருந்து ஆர்டர் வந்தது.
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, திருமணம் நடக்கும் மாதங்கள், கோவில் விழாக்கள் நடக்கும் மாதங்கள் ஆகியவற்றில் ஆர்டர் வருகிறது.
கோவில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளின் போதும் பாத்திர விற்பனை அதிகளவு நடைபெறும். ஆனால் தற்போதோ விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முன்பு போல் 'ரெகுலர்' விற்பனை இல்லை. தமிழகத்தில் பாத்திர உற்பத்தி மதுரை, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடக்கிறது.
மற்ற ஊர்களை ஒப்பிடும்போது திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி அதிகம். இதனால் மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்களை விட திருப்பூர் பாத்திரங்களின் விலை அதிகமாக உள்ளது. இதனாலும் விற்பனை பாதிக்கிறது.