/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமான திருச்சப்பரம் பாரம்பரிய முறைப்படி நிறுவப்பட்டது
/
மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமான திருச்சப்பரம் பாரம்பரிய முறைப்படி நிறுவப்பட்டது
மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமான திருச்சப்பரம் பாரம்பரிய முறைப்படி நிறுவப்பட்டது
மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமான திருச்சப்பரம் பாரம்பரிய முறைப்படி நிறுவப்பட்டது
ADDED : மார் 10, 2024 01:11 AM

உடுமலை;உடுமலை அருகே, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மூலவர் கோபுரமாக பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரம் நிறுவப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு அருள்பாலிக்கும், முருகன், விநாயகர் என பரிவார சன்னதிகளில் கோபுரங்கள் உள்ள நிலையில், மூலவரான மும்மூர்த்திகளுக்கு மூலாலய கோபுரம் இல்லை. இக்கோவிலின் சிறப்பு அம்சமாக, ஆண்டு தோறும் மஹா சிவராத்திரியன்று, மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக, கிராம மக்கள், மலைவாழ் மக்கள் கொண்டு வரும் திருச்சப்பரம் நிறுவப்படுவது, பல நுாறு ஆண்டு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்ட நிலையில், கடந்த, 7ம் தேதி, பூலாங்கிணர் கிராமத்தில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய திருச்சப்பரம் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் காலை, திருச்சப்பர ஊர்வலம் துவங்கியது.
வழியோரத்திலுள்ள, கிராமங்களில் பொதுமக்கள் திருச்சப்பரத்திற்கு வரவேற்பு அளித்தனர். விவசாயம் செழிக்கவும், நோய், நொடியின்றி மக்கள் வாழ வேண்டி, உப்பு, மிளகு, நெற் கதிர்கள், மொச்சை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை உள்ளிட்ட சிறு தானியங்கள், பழம், தேங்காய் மற்றும் காய்கறிகள் என, விளை பொருட்களை, திருச்சப்பரத்தின் மீது வீசி வழிப்பட்டனர்.
நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, கோவிலுக்கு அருகே, யானை உரசும் பாறை பகுதியில், திருச்சப்பரம் எழுந்தருளியது. திருமூர்த்திமலைப்பகுதிகளில் வசிக்கும், மாவடப்பு, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகளில் இருந்து வந்த பழங்குடியின மக்கள், வனங்களில் சேகரித்த தேன், விளைவித்த மலைக்காய்கறிகள், தினை உள்ளிட்ட பொருட்களை, சுவாமிகளுக்கு படைத்து வழிபட்டனர்.
மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடனத்துடன் திருச்சப்பரம் கோவில் வளாகத்தில் வலம் வந்து, மும்மூர்த்திகளின் மூலாலயத்தின் மேல் ஏற்றி, மூலவர் கோபுரமாக நிறுவப்பட்டது. தொடந்ந்து, மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கின.
சிறப்பு அலங்காரம், 16 தீபங்கள் ஒளிரும் தரிசனமான, சோடச உபசார தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

