/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலத்தில் தட்... தட்... சத்தம்! குழிகளை உடனே சீரமைக்கணும்
/
மேம்பாலத்தில் தட்... தட்... சத்தம்! குழிகளை உடனே சீரமைக்கணும்
மேம்பாலத்தில் தட்... தட்... சத்தம்! குழிகளை உடனே சீரமைக்கணும்
மேம்பாலத்தில் தட்... தட்... சத்தம்! குழிகளை உடனே சீரமைக்கணும்
ADDED : பிப் 22, 2024 09:07 PM

உடுமலை:ரயில்வே மேம்பாலத்தில், ஓடுதளத்தில் ஏற்பட்டுள்ள குழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினரை, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை- - மூணாறு ரோட்டில், ரயில்வே கடவு எண் 95க்கு பதிலாக, நகராட்சி அலுவலகம் அருகே, மேம்பாலம் கட்ட, 12.70 கோடி ரூபாய், நிதி, 2006 - -07ல் ஒதுக்கப்பட்டது.
திட்டத்தில், பல ஆண்டு இழுபறிக்குப்பிறகு, காந்திசவுக் பகுதியில் துவங்கி, 732மீ., நீளத்திற்கு ஓடுதளம், 23 துாண்களுடன் இப்பாலம் கட்டப்பட்டது.
உடுமலையிலிருந்து மூணாறு, மறையூர், அமராவதி, திருமூர்த்திமலை உட்பட முக்கிய நகரங்களுக்கு, இப்பாலம் வழியாகவே வாகனங்கள் செல்ல வேண்டும்.
இந்த பாலத்தில், வாகனங்கள் செல்லும் ஓடுதளத்தில், துாண்களுக்கு, இடையிலான இணைப்பு பகுதியில், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தது. தொடர் போக்குவரத்து உட்பட காரணங்களால், இரும்புக்கம்பிகள், ஓடுதளத்தை விட உயரமாகி, வேகத்தடை போல மாறியுள்ளது.
இருசக்கர வாகனங்கள் அப்பகுதியை கடக்கும் போது, துருப்பிடித்த இரும்பு கம்பியால், டயர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது, அப்பகுதியில், அதிக சப்தம் எழுவதால், வாகன ஓட்டுநர்களிடையே அச்சம் ஏற்படுகிறது.
இதே போல், ஓடுதளத்தின் சில இடங்களில், குழிகள் ஏற்பட்டு, பள்ளமாக மாறியுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் தடுமாறுகிறது.
மேலும், நகராட்சி அலுவலகம் முன், பாலம் முடியும் இடத்தில், எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்விடத்தில், சிறிய ரவுண்டானா அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில், அச்சத்தை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பாலத்தில், ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.