/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டைடல் பார்க்' பணி; ஏப்ரலுக்குள் முடிக்க திட்டம்
/
'டைடல் பார்க்' பணி; ஏப்ரலுக்குள் முடிக்க திட்டம்
ADDED : பிப் 13, 2024 01:26 AM
திருப்பூர்:'ஐ.டி., துறைக்கு முன்னுரிமை கொடுத்து மாணவ, மாணவியர் கல்வி பயில்வதால், திருப்பூரில் 'டைடல் பார்க்' உருவாவது, வரவேற்க்கத்தக்கது' என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மாநிலத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில், 'மினி டைடல் பார்க்' அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி,திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், திருப்பூர் - அவிநாசி பிரதான சாலையோரம், 'டைடல் பார்க்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், '39 கோடி ரூபாய் செலவில், 7 அடுக்கு கட்டடமாக, மினி டைடல் பார்க் கட்டப்பட உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடம், பாறைக்குழியாக இருந்த நிலையில், சுற்றியுள்ள குடியிருப்புகள், பிற கட்டுமானங்களில் இருந்து வெளியேறிய கழிவுநீர், பாறைக்குழியில் குளமாக தேங்கியது. அந்நீரை வெளியேற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்தது; இதனால் பணிகள் தாமதமாகின.
'பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என டைடல் பார்க் நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, திட்டமிடப்பட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்து, கட்டுமானப்பணி மேற்கொள்ள முடிவெக்கப்பட்டது. அதன்படி, பணி துவங்கி, 'விறுவிறு'வென நடந்து வருகிறது.
நிலத்தடி, தரைதளம் உட்பட, 9 அடுக்கு கட்டடமாக டைடல் பார்க் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. 'கட்டுமானப்பணியை வரும், ஏப்., மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.