/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100வது நிகழ்ச்சியை நோக்கி 'திடும' ஆட்டக் கலைஞர்கள்
/
100வது நிகழ்ச்சியை நோக்கி 'திடும' ஆட்டக் கலைஞர்கள்
100வது நிகழ்ச்சியை நோக்கி 'திடும' ஆட்டக் கலைஞர்கள்
100வது நிகழ்ச்சியை நோக்கி 'திடும' ஆட்டக் கலைஞர்கள்
ADDED : ஜன 16, 2025 11:32 PM

பல்லடம்; கும்மியாட்டம், கம்பத்து ஆட்டம், காவடி ஆட்டம் என, பழங்கலைகளை வளர்க்க, இளம் தலைமுறையினர் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆறாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அம்மன் இசை கலைக்குழுவினர் 'திடும' ஆட்டம் ஆடி கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி ஆசிரியர் நாச்சிமுத்து மற்றும் குழுவினர் கூறுகையில், 'கடந்த, 30 ஆண்டுகள் முன்பிருந்தே 'திடும' ஆட்டம் கலை நிகழ்ச்சி இப்பகுதியில் விமரிசையாக நடந்து வந்துள்ளது. முன்னோரைப் பின்பற்றி, கலைக்குழு உருவாக்கி இக்கலையை பலரும் கற்று இன்றுவரை பின்பற்றி வருகிறோம்.
அம்மன் கலைக்குழுவில், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் பலரும், இக்கலையை கற்று ஆர்வத்துடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகள் முன், மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று 'திடும 'ஆட்டம் ஆடி சிறப்பித்தோம். தொடர்ந்து, சென்னையில் நடந்த செம்மொழி மாநாட்டிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு, 90க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி உள்ளோம். விரைவில், 100வது நிகழ்ச்சியை எட்டவுள்ள நிலையில், கலையை பரவலாக கொண்டு சேர்க்கவும் முயற்சித்து வருகிறோம்' என்றனர்.
முன்னதாக, ஆறாக்குளம் மாரியம்மன் கோவில் திடலில், 'திடும' ஆட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ மாணவியர் பலர், மத்தளம் இசைத்தும், நடனம் ஆடியபடியும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.