/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒட்டகத்தைக் கட்டிக்கோ... கெட்டியாக ஒட்டிக்கோ'
/
'ஒட்டகத்தைக் கட்டிக்கோ... கெட்டியாக ஒட்டிக்கோ'
ADDED : பிப் 18, 2024 01:57 AM

'பாலைவனக்கப்பல்' எனப்படும் ஒட்டகத்தை, திருப்பூர் வீதிகளில் பார்க்க முடிந்தது என்றால், ஆச்சரியம் வரத்தானே செய்யும். ஒட்டகம் மீது அமர்ந்து ஒய்யாரமாக வந்தவரிடம் பேச்சு கொடுத்தோம்.
அவர் பெயர் தீபக். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். பத்து ஆண்டுகள் முன்பு ஒட்டகம் ஒன்றை வாங்கிக் கொண்டு, லாரியில் தமிழகத்துக்கு பிழைப்பு தேடி வந்திருக்கிறார்.
சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ராமேஸ்வரம், மதுரையில் சுற்றித்திரிந்து, ஒட்டக சவாரிக்கு, சிறுவர்களுக்கு, 50 ரூபாய், பெரியவர்களுக்கு, 70 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து வாழ்க்கையை ஓட்டி வந்திருக்கிறார்.
தினமும் ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்ததால், குடும்பத்தை சேர்ந்த இன்னொருவரையும் வரவழைத்து விட்டார். தற்போது, கல்யாண விசேஷம், பொருட்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்த முறையில், 'ரேட்' பேசி கொள்கிறாராம். ஒட்டகத்துக்கு தேவையான இலை, புல், காய்கறிகள், வாழைத்தண்டு, கஞ்சி வாங்கி தினமும் இரண்டு வேளை உணவாக கொடுத்து விடுகிறார். சீசனுக்கு தகுந்த மாதிரி, ஒவ்வொரு ஊருக்கும், ஒட்டகத்துடன் சென்று வாழ்க்கை பயணத்தை நடத்துகிறார்.
அவர் கூறியதாவது:
பக்கத்துல கேரளா, ஆந்திராவுல ஒட்டகம் ஓட்ட அனுமதி இருக்கு. கர்நாடகாவில இல்ல. 30 கி.மீ., துாரம் இருந்தா, ஒட்டகத்துடன் நடந்தே போயிருவேன். அதற்கு மேல லாரியில கூட்டிட்டு போவேன். இப்ப எங்க கிட்ட இருக்கிற ரெண்டு ஒட்டகம் புனேவில் வாங்கினது. எல்லா ஒட்டகமும் சொன்னபடி கேட்காது. மூன்று வயசில இருந்தே, சவாரிக்கு பழக்கப்படுத்தினோம். இப்ப, இதுக்கு ஒம்பது வயசாச்சு.
சின்ன புள்ளைங்களால்தான் என் பொழப்பு ஓடுது. எங்க ஊர்ல (மகாராஷ்டிரா) வீட்டுக்கு ஒரு ஒட்டகம் இருக்கு. ஆனா, சவாரி செய்ய யாரும் விரும்பிறதில்லை. சுமை துாக்க, 20 ரூபாய் தான் குடுப்பாங்க. அதனால, தான் இங்க வந்தேன். என்னோட பேமிலியை சேர்ந்த ஆறு பேர் ஒட்டகத்தை வச்சு தான் வாழறோம். அது துாங்கினால், தான் எங்களுக்கு துாக்கம்.
இவ்வாறு தீபக் கூறினார்.
ஒரு மரத்தின் நிழலில் ஒட்டகத்தை நிறுத்தி, ஓய்வெடுத்தார். அதனிடம் அவர் ஏதோ, ஹிந்தியில் சொல்ல, அது சிரமப்பட்டு, கால்களை பரப்பி உட்கார்ந்து, வாயை அசைபோட ஆரம்பித்தது. தீபக்கும் வாஞ்சையாக அதன் கழுத்தை தடவி கொடுத்தார். சாலையில், வெயில் 'சுள்ளென்று' அடிப்பது நமக்கு தெரிந்தது.
பாலைவனத்தை தன் நீண்ட கால்களால் அளக்கும் ஒட்டகத்துக்கு, நம்ம ஊர் வெயில் ஒன்று சோதிக்கவில்லை என்பது, அதன் ஆசுவாசத்தில் காண முடிந்தது.
திருப்பூரில் சுற்றி வரும் ஒட்டகங்கள்.