ADDED : பிப் 08, 2025 11:32 PM
பல்லடம் : பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்பாடற்ற பாறைக்குழி உள்ளது. இதில், குப்பைகளுடன் காஸ்டிங் கழிவுகளும் கொட்டப்பட்டு வந்தன.
இவ்வாறு நுாற்றுக்கணக்கான டன் காஸ்டிங் கழிவுகள் பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டிய இப்பகுதி விவசாயிகள், பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டுள்ள காஸ்டிங் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில், காஸ்டிங் கழிவுகளை அள்ளி எடுத்து, நில உரிமையாளருக்கு சொந்தமான நிறுவனத்துக்குள் கொட்டினர்.
இதனால், விவசாயிகளுக்கும் நில உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அதில், விவசாயிகள், பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் காஸ்டிங் கழிவுகளை பாறைக்குழியில் இருந்து நில உரிமையாளரே அகற்றிக் கொள்ள வேண்டும். வரும், 10ம் தேதிக்குள் காஸ்டிங் கழிவுகளை முழுமையாக அகற்றி, பாறைக்குழியை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகள், பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, காஸ்டிங் கழிவுகள் அப்புறப்படுத்த போலீசார் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. போலீசார் உத்தரவை பின்பற்றி, காஸ்டிங் கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.