ADDED : ஜூன் 30, 2024 11:06 PM
அவிநாசி;திருமுருகன்பூண்டியில் உள்ள தன வர்ஷினி அவென்யூ ரிசர்வ் சைட் பகுதியில் வள்ளி முருகன் கலைக்குழு சார்பில் கும்மி கலை வரலாற்றில் முதன்முறையாக திருக்குறள் கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
துரைசாமி நகர், தன வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 108 பெண்கள் கலந்து கொண்டு வரலாற்று தொடர்புடைய கிராமிய பாடல்களுக்கு திருக்குறள் விளக்க உரையுடன் கும்மியாட்டம் நிகழ்த்தினர்.
இதற்காக ஆசிரியர் பழனிச்சாமி, இணை ஆசிரியர் ரங்கநாதன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
--
கலைகிறது ஏழைகளின் வீடு கனவு
திருப்பூர், ஜூலை 1-
மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்துக்கான சிறப்பு கிராம சபா, பெருமாநல்லுாரில் தலைவர், துணை தலைவர் இல்லாமல் நடந்தது.
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி தலைவர் சாந்தாமணி; இவரது கணவர் வேலுசாமி, துணை தலைவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக, ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் பொன்னுசாமிக்கும் இடையே, கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.அடிக்கடி, மாவட்ட நிர்வாகத்திடம் பரஸ்பரம் குற்றம்சாட்டி, மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய சிறப்பு கிராம சபா கூட்டத்தில், தலைவர், துணை தலைவர் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக, மூத்த உறுப்பினர் தலைமையில், சிறப்பு கிராமசபா கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக, ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
----
கலியுக பிரச்னைகளுக்கு பாகவதமே சரியான மருந்து
திருப்பூர், ஜூலை 1-
''கலியுகத்தில் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், ஸ்ரீமத் பாகவதமே சரியான மாமருந்து,'' என, ஸ்ரீபாலாஜி பாகவதர் பேசினார்.
ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மகா உற்சவம், திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நடந்து வருகிறது. கடந்த, 26ல் துவங்கிய நிகழ்ச்சி, நாளை (2ம் தேதி) நிறைவு பெறுகிறது.
'பிரஹலாதன் சரித்திரம்' என்ற தலைப்பில் ஸ்ரீபாலாஜி பாகவதர் பேசியதாவது:
ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள ஒவ்வொரு அத்யாயமும், இறைவனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இருதயத்தில், பக்தியை நிரப்பும் வகையில், பாகவதம் அமைந்துள்ளது. கலியுகத்தில் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கு, பாகவதமே சரியான மாமருந்து. இறைவன் மீதான பக்தியை பெருக்குவதே, பாகவதத்தின் சிறப்பு.
பக்தியை பின்பற்றி ஞானம் பெற வேண்டும் என, ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டப்படுகிறது. பாகவதம் செய்ய முடியாதவிட்டாலும், அரங்கில் அமர்ந்து கேட்க இயலாவிட்டாலும், அவ்வழியாக செல்லும் போது ஒரு நிமிடம் காதில் கேட்டாலே, இறையருள் கிடைக்கும்.
எவ்வித முயற்சியாலும் இறைவன் நம்மை தேடி வரமாட்டார்; பக்தியால் மட்டுமே வருகிறார். இப்படித்தான் வருவார் என்று கூறமுடியாது; எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இறைவன் வருவார். பக்தரின் உருக்கத்துக்கு இறைவன் இறங்கி வருவான்; உருட்டல், மிரட்டலுக்கு வசப்பட மாட்டார்.
இறுதிகாலத்தில் இறைவனை நினைக்க முடியாத நிலை உருவானாலும், முன்பு செய்த பக்தியின் பயனாய், சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்வான்.
இவ்வாறு, அவர் பேசினார்.
----
நாட்டிய நிகழ்ச்சி
திருப்பூர், ஜூலை 1-
நாட்டிய இசை கலைஞர்களை ஊக்குவிக்கவும், இளம் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியாக, மாதம்தோறும், திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட்டம் சார்பில், ஒவ்வொரு இடத்தை தேர்வு செய்து, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கலை விழிப்புணர்வு பயணம் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாவது ஆண்டு துவக்கமாக, திருப்பூர் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நேற்று, சிறப்பு நாட்டிய நடன நிகழ்ச்சி நடந்தது. காட்டுவளவு ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா முடிந்து, மண்டலாபிேஷகம் நடந்து வருகிறது.
சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், காமாட்சியம்மன் வரலாறு தொடர்பான நாட்டிய நடன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதுகுறித்து சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட நிர்வாகி சந்தியா கூறுகையில், ''ஸ்ரீபஸ்வந்த் உபத்யாயா, ஸ்ரீஸ்ருதி கோபால், ஆதித்யா ஆகியோரது வழிகாட்டுதலுடன், ஸ்ரீகாமாட்சியம்மன் வரலாறு நாட்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த நாட்டிய பேராசிரியர் சுவின் பிரசாத், ஸ்ரீகாமாட்சியம்மன் வரலாறுகளை விளக்கும் வகையில், பரத நாட்டியமாடியது, அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது, '' என்றார்.
---
மாணவர்களுக்கு தியானப்பயிற்சி அளிக்க முடிவு
திருப்பூர்:
ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பயிற்சியாளர்களுக்கு திருப்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது.இதில், அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் தியானப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தியானப் பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி இம்முகாமில் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் துவங்கிய இம்முகாம் நேற்று இரண்டாவது நாளில் நிறைவடைந்தது.
இரண்டாம் நாளான நேற்று, பொதுமக்களுக்கு எளிமையான முறையில் யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை கற்றுத்தரும் செயல் விளக்கப் பயிற்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டுத்தியானம் நடைபெற்றது.
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை பெருநகர மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கட் லஷ்மிநாராயணன், பாண்டிச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சித்தானந்தம், மூத்த பயிற்சியாளர் சோமக்குமார் உட்பட பலர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
திருப்பூர் மைய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் சோமக்குமார் தியானப் பயிற்சியின் போது கையாள வேண்டிய நுட்பங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், குறு, சிறு நிறுவன உரிமையாளர், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் யோகாசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிகள் அளிப்பது; துறை சார்ந்த நிபுணர்கள் மூலம், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டுவது ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டங்கள் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகளை யோகாசன நிபுணர் சந்தியா கதிர் தொகுத்து வழங்கினார். நிறைவாக, திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்புரத்தினம் நன்றி கூறினார்.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சியளர்கள் கலந்து கொண்டனர்.
---
திருவாசகம் சொற்பொழிவு
அவிநாசி, ஜூலை 1-
அவிநாசியில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சைவர் திருமடத்தில் விஜயமங்கலம் அப்பரடிப்பொடி சொக்கலிங்கத்தின் திருவாசகம் தொடர் விளக்கவுரை நடைபெற்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5:30 முதல் இரவு 7:25 மணி வரை திருவாசகம் தொடர் விளக்கவுரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. திங்கள் தோறும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு பவானி வேலுச்சாமி நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சி மாலை 6:00 முதல் இரவு 7:15 வரை நடைபெறுகின்றது.
---
அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கை குறைந்தது ஏன்?
திருப்பூர், ஜூலை 1-
திருப்பூரில், தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள், மாதம் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.
அரசு கேபிள் டிவி இணைப்புக்கு, 184 ரூபாய் அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக சேனல்; குறைந்த கட்டணம் என்பதால், பெரும்பாலானோர், அரசு கேபிள் இணைப்பு பெறுவதையே விரும்புகின்றனர்.
அரசு கேபிளே இல்லை
அதேநேரம், எச்.டி., பாக்ஸ் இல்லாதது, ஒளிபரப்பு தடை போன்ற அரசு கேபிளின் குறைகளை பட்டியலிட்டு கூறி, தனியார் கேபிள் இணைப்பு வசம் மக்களை ஆபரேட்டர்கள் இழுத்துவிடுகின்றனர். சில இடங்களுக்கு இணைப்பு வழங்க, அரசு கேபிள் ஆபரேட்டர்களே இல்லாத நிலையும் உள்ளது. வேறுவழியில்லாமல் பெரும்பாலானோர், தனியார் கேபிள் இணைப்பு பெறவேண்டிய நிலை ஏற்படுகிறது.
பனியன் தொழிலாளர் மிகுந்த திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா பகுதி குடியிருப்பு பகுதிகளில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தனியார் கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; ஆனால், அரசு கேபிள் நிறுவனத்தின் 8 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சொல்வது சரிதானா?
''அரசு இணைப்பில் எச்.டி., பாக்ஸ் இல்லாததால், யாரும் விரும்புவதில்லை என்று ஆபரேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், 30 சதவீத மக்களே எச்.டி., பாக்ஸ் மற்றும் எச்.டி., சேனல்களை எதிர்பார்க்கின்றனர். எச்.டி., சேனல்களுக்கு அதிககட்டணம் செலுத்தவேண்டியிருப்பதால், 70 சதவீதம் பேர், சாதாரண பாக்ஸ்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர்.
தமிழக அரசு, தடையில்லா ஒளிபரப்பை உறுதி செய்யவேண்டும்; விரைவில் எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, ஆபரேட்டர்கள் அரசு கேபிள் இணைப்பு வழங்க முனைப்புகாட்டவேண்டும்.
அரசு செட்டாப் பாக்ஸ்களை முடக்கிவைத்துள்ள ஆபரேட்டர்களுக்கு பதில், வேறு புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமம் வழங்கி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் வினியோகஸ்தர் ஒருவர்.
----
இ.எஸ்.ஐ., மருத்துவமனையிலயே தொழிலாளர் பதிவு
திருப்பூர்:
பல லட்சம் தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை திருப்பூரில் அமைந்து, இதுவரை, ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்aதுள்ளனர்.
'ஒவ்வொரு சிகிச்சை, ஆலோசனைக்கு கோவைக்கு சென்று மன்றாட வேண்டியுள்ளது. திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைந்து விட்டால், அலைச்சல் குறையும்,' என்ற திருப்பூர் பனியன் தொழிலாளரின், 20 ஆண்டு கால கோரிக்கைக்கு, நடப்பாண்டு துவக்கத்தில் விடை கிடைத்தது.
பூலுவப்பட்டி அருகே, 85 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்ட மருத்துவமனை வளாகத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இ.எஸ்.ஐ.,க்குரூ.200 கோடி
திருப்பூரில் பனியன் தொழிலை நம்பி சுமார், 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். உள்நாட்டுக்கான உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதி என ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு இங்கு வர்த்தகம் நடக்கிறது.
சென்னைக்கு அடுத்து இ.எஸ்.ஐ-.,க்கு அதிக பங்களிப்பு செய்யும் மாவட்டமும் திருப்பூர் தான். 4.50 லட்சம் முதல் ஆறு லட்சம் தொழிலாளர் மூலம் ஆண்டுக்கு சுமார், 200 கோடி ரூபாய் வரை இ.எஸ்.ஐ., க்கு செலுத்தப்படுகிறது.
100 படுக்கைகளுடன் மருத்துவமனை
இச்சூழலில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கப்பட்டது மக்களுக்கு பெரும் பயனாக மாறியுள்ளது. ஆனால், 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இன்னமும் டாக்டர், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வரவில்லை.
இது ஒருபுறமிருக்க தொழிலாளர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்க, மருத்துவமனையிலேயே பதிவு துவங்கியுள்ளது. இ.எஸ்.ஐ., திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள பெயர், முகவரி, போட்டோ, ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் மருத்துவமனையில் பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வகையில், கடந்த நான்கு மாதங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது விபரங்களை வழங்கி, இ.எஸ்.ஐ., பதிவு செய்து வருகின்றனர். விரைவில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதியுடன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை விரிவாகினாலும், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவர்.
----
வேட்பாளர் செலவு கணக்கு சரிபார்ப்பு
திருப்பூர், ஜூலை 1-
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், சுயேச்சைகள் உள்பட 13 வேட்பாளர்கள் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. தேர்தல் முடிந்தபோதும்கூட, மாவட்ட தேர்தல் பிரிவினர், பல்வேறு வகை பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் செலவின கணக்குகள் பெறப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டுவருகிறது.
தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார், திருப்பூர் வந்துள்ளார். 13 வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தேர்தல் செலவு கணக்குகள், கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, தணிக்கை செய்யப்பட்டுவருகிறது. இப்பணிகளில், அதிகாரிகள் 18 பேர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர் சமர்ப்பித்த செலவின கணக்குகள், தேர்தல் காலத்தில் கண்காணிப்பு பிரிவினரால் கணக்கிடப்பட்ட செலவினங்களுடன் ஒப்பிடப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது.
ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் விளக்கம் பெறப்படும்.
----
'குடி'மகன்கள் 'வாச'ஸ்தலமாக பஸ் ஸ்டாண்ட்
பல்லடம், ஜூலை 1-
பல்லடம் பஸ் ஸ்டாண்ட், 'குடி'மகன்களின் படுக்கையறையாக மாறிவருகிறது.
பல்லடம் பஸ் ஸ்டாண்டில், அமர்வதற்குதான் இடமில்லை என்றால், நிற்பதற்கு கூட பயணிகள் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஏராளமான பள்ளி - கல்லுாரி மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வருபவர்கள், பஸ் ஏறும் வரை நடைபாதையில்தான் காத்திருக்க வேண்டியுள்ளது.
நடைபாதை ஆக்கிரமிப்பு ஒரு புறம் இருக்க, அடிக்கடி குடித்துவிட்டு நடைபாதையில் 'மட்டை'யாகும் 'குடி'மகன்களால், பஸ் ஸ்டாண்ட் 'குடி'மகன்களின் படுக்கையறையாக மாறி வருகிறது. வாந்தி எடுத்தும், ஆடைகள் கலைந்தபடியும் நடைபாதையில் விழுந்து கிடப்பது அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. இதை தடுக்க வேண்டிய போலீசாரம் கண்டு கொள்வதில்லை.
---
வணிக வளாகம் சீரமைப்பு
திருப்பூர், ஜூலை 1-ஜெய்வாபாய் பள்ளி வீதி, மாநகராட்சி வணிக வளாகம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம், ஜெய்வாபாய் பள்ளி வீதியில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது.இந்த வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இதன் சுவர்கள் மற்றும் தரை மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும், இவ்வளாகத்துக்கு பாதுகாப்பாக முன்புறத்தில் கேட் இல்லை. திறந்த நிலையில் கிடந்த வளாகம் என்பதால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.இரவு நேரங்களில் போதை ஆசாமிகள், சமூக விரோத நபர்கள் இவ்வளாகத்தில் குடியேறும் நிலை இருந்தது. இது குறித்து கடைக்காரர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து அறிக்கை அளித்து, சீரமைப்பு பணிக்கு ஒப்புதல் பெற்றனர். அதன் பேரில், இவ்வளாகத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, முன்புறம் புதிதாக கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
---
பனை விதை விருட்சமாகிறது
அனுப்பர்பாளையம், ஜூலை 1--
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் கடந்த ஆட்சியில் குளம், குட்டை துார் வாரப்பட்டது. துார்வாரும் பணியில் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
திருப்பூர், 25வது வார்டு, காவிலிபாளையம் புதுாரில் உள்ள குட்டையை மக்கள் நல அறக்கட்டளை, ஸ்ரீபுரம், முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் சேர்ந்து துார் வாரினர்.
துார் வாரிய போது, குட்டையின் கரைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றினர்.
தொடர் மழையில் குட்டையில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் தேக்கத்தால் ஊன்றப்பட்ட பெரும்பான்மையான பனை விதைகள் முளைத்து தளிர் விட்டு வளர்ந்து வருகிறது.
இதனால் விதை ஊன்றிய தொண்டு அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காலம் தொடங்கும் முன் குட்டையில் விடுபட்ட இடங்களில் மேலும் பனை விதை நட தொண்டு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
---
தாமத வரி விவகாரம்
சட்டசபையில் எதிரொலித்த பிரச்னை
திருப்பூர், ஜூலை 1-
ஜி.எஸ்.டி.,ல் தாமதமாக செலுத்தும் வரிக்கான வட்டியை குறைக்கவேண்டும் என்கிற திருப்பூர் வர்த்தகர்களின் கோரிக்கை, சட்டசபையில் எதிரொலித்ததால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோரிடம், ஜி.எஸ்.டி.,ல் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு குறித்து மனு அளித்திருந்தார்.
மனுவில் கூறப்பட்டது என்ன?
அம்மனுவில் கூறியிருப்பதாவது: ஜி.எஸ்.டி.,ல் மாதாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படும்போது, நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை, மாதம் 500 ரூபாயாக மாற்றி அமைக்கவேண்டும். தாமதமாக வரி செலுத்தும் வர்த்தகர்களுக்கு, 18 முதல் 24 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது; தாமத வரிக்கான வட்டியை 12 சதவீதமாக குறைக்கவேண்டும்.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்த, கடந்த 2017 ஜூலை மாதம் முதல், நடப்பாண்டு ஜனவரி மாதம் வரையிலான பல்வேறு வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில், சமாதான் திட்டம் அறிவிக்கவேண்டும்.
வர்த்தகர் நலனை பாதுகாக்கும்வகையில், அகில இந்திய வணிகர் நல பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படவேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரிக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்று, பதிவெண் பெற்ற அனைத்து வரி பயிற்சியாளர்களுக்கும், வரி பயிற்சியாளர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். திருப்பூர் வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில், ஜி.எஸ்.டி.,க்கான மேல் முறையீட்டுப்பிரிவு துவங்கப்படவேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையுடன் வர்த்தகர்கள்
திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது: தாமத வரிக்கான வட்டி குறைப்பு உள்பட ஜி.எஸ்.டி., சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து வணிக வரி அமைச்சர் மற்றும் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., ஆகியோரிடம் மனு அளித்திருந்தோம்.
'திருப்பூர் வணிக வரி இணை ஆணையர் அலுவலகத்தில், மேல் முறையீட்டு பிரிவு துவங்கப்படவேண்டும். தாமதமாக செலுத்தப்படும் ஜி.எஸ்.டி.,க்கு விதிக்கப்படும் 18 முதல் 24 சதவீத அபராத வட்டி விகிதத்தை, எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைக்கவேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவேண்டும்,' என, எம்.எல்.ஏ., செல்வராஜ் சட்டசபை கூட்டத்தில் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வர்த்தகர்களின் கோரிக்கையை ஜி.எஸ்.டி., கவுன்சில் நிறைவேற்றிவைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
இவ்வாறு, முத்துராமன் கூறிானர்.
---
தக்காளி வரத்து அதிகரிப்பு விலைசரிவு
திருப்பூர்:
திருப்பூர் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை சரிந்தது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 12 டன் தக்காளி வரும். கடந்த, பத்து நாட்களாக வரத்து குறைந்து, ஆறு முதல், எட்டு டன் தான் வந்தது; நேற்று, 10.45 டன் வந்தது. வடக்கு உழவர் சந்தைக்கு, 2.50 டன் வழக்கமான வரத்தாக உள்ள நிலையில், ஒரு வாரமாக, 1.60 டன் தக்காளி மட்டும் வந்தது. நேற்று, 2.30 டன் தக்காளி வந்தது.
குறைந்திருந்த தக்காளி வரத்து மெல்ல அதிகரித்து இயல்பு திரும்ப துவங்கியுள்ளதால், சந்தையில் கிலோ, 60 முதல், 70 ஆக இருந்த ஒரு கிலோ தக்காளி விலை, கிலோ, நேற்று, 45 முதல், 50 ரூபாய் ஆக குறைந்தது.
இரண்டு தினங்களாக கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில தக்காளி வரத்து அதிகமாகி, வெளிமார்க்கெட்டில் விலை குறைந்தது. இதனை அறிந்து, லாபத்தை எதிர்பார்த்து நேற்று பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை சந்தைக்கு கொண்டு வந்தனர். ஒரே நேரத்தில் வரத்து ஒரு டன் வரை உயர்ந்து விட்டதால், விலை திடீரென குறைந்து விட்டது.
---
மீன் வரத்து உயர்ந்தது
விற்பனை சூடுபிடித்தது
திருப்பூர், ஜூலை 1-
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக, 30 டன் கடல் மீன்கள், 40 டன் டேம் மீன்கள் என, 70 டன் மீன்கள் வரும்.
மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்ததால், கடல் மீன் வரத்து, 40 டன்னாக குறைந்தது.
கடந்த வாரம் தடைவிலகிய போதும், மீனவர்கள் முழுமையாக கடலுக்கு செல்லாததால், கடல் மீன் வரத்து இயல்புக்கு திரும்பவில்லை.
தடைவிலக்கி பத்து நாட்களான நிலையில், பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் வரை மீன் பிடிக்க சென்று வருவதால், திருப்பூருக்கான மீன் வரத்து, உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை துவங்கி, நள்ளிரவு வரை 50க்கும் அதிகமான வேன்களில், ராமேஸ்வரம், மீன்கள் வந்திறங்கின.
ஆந்திரா, கேரளா மீன்கள் வரத்தும் அதிகமாகியது.
70 டன் மீன்கள் வந்ததால், அதிகாலை, 4:00 மணிக்கு சுறுசுறுப்பாக விற்பனை துவங்கியது. காலை 8:00 முதல், 10:00 மணி வரை மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாத நிலை வாடிக்கையாளருக்கு ஏற்பட்டது.
நேற்று, வஞ்சிரம் மீன், கிலோ 550, மத்தி, 200, படையப்பா, 300, வாவல், 350, பாறை, 180, சங்கரா, 280 ரூபாய்க்கு விற்றது.
வரத்து அதிகரித்த நிலையில், கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் மீன் விலை கிலோவுக்கு, 20 முதல், 50 ரூபாய் வரை குறைந்தது. வாடிக்கையாளர்களும் அதிகளவில் மீன் வாங்கி சென்றனர்.
இரண்டாவது வாரமாக மீன் விற்பனை களைகட்டியதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.