/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விருதுகளை அள்ளிய திருப்பூர் கோட்டம்
/
விருதுகளை அள்ளிய திருப்பூர் கோட்டம்
ADDED : செப் 01, 2025 10:53 PM
திருப்பூர்; தபால் துறை சார்பில், தமிழகத்தில் வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உப கோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இதில், திருப்பூர் தபால் கோட்டம், கடந்த நிதியாண்டில், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், 3.09 கோடி பிரீமியம் ஈட்டி, மாநில அளவில், 2ம் இடம் பிடித்தது. கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தில், 2.81 கோடி பிரீமியம் ஈட்டி, 3ம் இடம், பார்சல் பதிவு வருவாய் வளர்ச்சி வீதத்தில், அதிக வளர்ச்சி பெற்ற பிரிவில், 54 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, தமிழக அளவில், 2ம் இடம் என, முக்கியமான மூன்று பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. பார்சல் பிரிவில் பதிவு செய்த வருவாய் வளர்ச்சி, கடந்த, 2023-2024 நிதியாண்டை காட்டிலும், 96 சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
இது தவிர, பிரீமியம் கணக்கு சேர்க்கை மற்றும் பொது காப்பீடு பிரிவுகளில், திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிதியாண்டின் (2024-2025) விருதுகள் வழங்கும் விழாவில், கோட்ட வாரியமாகவும், உட்கோட்ட வாரியமாகவும், தனிப்பட்ட சிறப்பு செயல்பாடு என, மொத்தம், 9 விருதுகளை திருப்பூர் கோட்டம் பெற்றுள்ளது.
இது குறித்து, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது:
இந்த விருதுகள், நம் தபால் துறையின் எதிர்கால வளர்ச்சி, சேவையை மேம்படுத்த ஊக்கமளிக்கும். நகர்ப்புற மக்களுக்கான டிஜிட்டல் சேவை, கிராமப்புற மக்களுக்கான காப்பீடு என, பன்முக சேவையின் வெளிப்பாடை காட்டுகிறது. இந்த விருதுகள் வாயிலாக, திருப்பூர் தபால் கோட்டம் வாயிலாக வழங்கப்படும் பல்வேறு சேவைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
'டிஜிட்டல் பேங்கிங்' நோக்கி, நம் அஞ்சலகம் ஒரு படி மேலே செல்லும் வகையில், அஞ்சலகங்களில் காகித பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், இ-கேஒய்சி., முறையில் சேமிப்பு கணக்கு துவங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் எண் பயன்படுத்தி விரல் ரேகை பதிவு வாயிலாக எளிதாக, சேமிப்பு கணக்கு துவங்க, பணம் பரிவர்த்தனை செய்யவும் முடியும்.
திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும், ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளுடன் யுபிஐ., பேமென்ட் உள்ளிட்ட பண பரிவர்த்தனை வசதிகளும் உண்டு.
விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது, www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் தகவல்களை பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.