/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுக்கே வழிகாட்டும் திருப்பூர்
/
நாட்டுக்கே வழிகாட்டும் திருப்பூர்
ADDED : செப் 05, 2024 12:47 AM

திருப்பூர் : ''வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், இந்தியாவுக்கே வழிகாட்டும் நகரமாக, திருப்பூர் முன்னேறியுள்ளது,'' என, ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசினார்.
திருமுருகன்பூண்டி, ஐ.கே.எப்., வளாகத்தில், 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இந்த கண்காட்சியில், பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், ஜவுளி பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டால் அமைத்துள்ளன.
நேற்று நடந்த விழாவில், ஐ.கே.எப்., தலைவர் சக்திவேல் வரவேற்றார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், தமிழக அரசின் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் சென்று, கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சி குறித்து, முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது:
திருப்பூரில் நடக்கும், 51வது ஐ.கே.எப்., கண்காட்சியில், தொழில்நுட்பம், மறுசுழற்சி மற்றும் பசுமை சார் உற்பத்தி ஜவுளிகள் அணிவகுத்துள்ளன. ஏற்றுமதி வர்த்தகம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு பனியன் வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் நடந்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தால், சர்வதேச நாடுகள், பசுமை சார் உற்பத்தியை எதிர்பார்க்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, சிறப்பு கவனம் செலுத்தி பசுமை சார் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறோம். குறிப்பாக, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், திருப்பூர் முன்னணியில் இருக்கிறது.
வழிகாட்டும் திருப்பூர்
பின்னலாடை தொழிலில், 80 சதவீத பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே, இத்தொழிலில் தான், பெண்கள் அதிகம் பயன்பெறுவது, திருப்பூருக்கு பெருமை. பசுமை சார் உற்பத்தியில், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டும் நகரமாக, திருப்பூர் முன்னேறியுள்ளது. பெண்கள், சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணியாற்றி வருகின்றனர்; உற்பத்தியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.
வங்கதேச ஆர்டர்
திருப்பூர் தொழிலாளர்களும் திறன் படைத்தவர்களாக இருக்கின்றனர். வங்கதேச ஆர்டர்கள், நமக்கு திரும்பும் என்று, நாம் எதிர்பார்க்கவில்லை. தரமான, பசுமை சார் ஆடை உற்பத்தி செய்வதால், நமக்கு புதிய வாய்ப்புகள் பிரகாசமாக மாறியிருக்கிறது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சேவைத்துறை, 60 சதவீத பங்களிப்பு செய்கிறது; உற்பத்தி பிரிவின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. வேளாண்துறைக்கு அடுத்ததாக, ஜவுளித்துறை அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.