/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொரோனா இல்லாத மாவட்டமானது திருப்பூர்!
/
கொரோனா இல்லாத மாவட்டமானது திருப்பூர்!
ADDED : ஜன 09, 2024 12:51 AM
திருப்பூர்;தொடர் சிகிச்சையில் இருந்தவர்கள் நலம் பெற்று வீடு திரும்பியதால், கொரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த, 82 வயது முதியவருக்கு, டிச., 19ல் கொரோனா உறுதியானது. டிச., கடைசி வாரம், 54 வயது நபர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இரண்டு பேர் மருத்துவமனையில் இருந்த நிலையில், 82 வயது நபரை குடும்பத்தினர், வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக கூறி அழைத்துச் சென்று விட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த, 54 வயது நபர் குணமடைந்து விட்டார். இதனால், திருப்பூரில் கொரோனா சிகிச்சையில் யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பு இல்லை
மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ''தாலுகா அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறிகுறியுடன் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை'' என்றார்.
மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ''தொற்று பாதிப்பு திருப்பூர் மாவட்டத்தில் இல்லை. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கினால், கேரளாவில் இருந்து வருவோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர். சளி, தொடர் காய்ச்சல், இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால், டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம்'' என்றார்.
வார்டு 'காலி'
ஜே.என்., 1 கொரோனா பாதிப்பு துவங்கியவுடன் முன்னெச்சரிக்கையாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட வார்டில், தற்போதைக்கு பாதிப்பில் யாருமில்லாததால், மருத்துவ மற்றும் சுகாதார துறையினர் நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர்.