/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறியாளர்களின் ஸ்டிரைக்கால் பாதிப்பு : 4.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி இழப்பு
/
விசைத்தறியாளர்களின் ஸ்டிரைக்கால் பாதிப்பு : 4.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி இழப்பு
விசைத்தறியாளர்களின் ஸ்டிரைக்கால் பாதிப்பு : 4.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி இழப்பு
விசைத்தறியாளர்களின் ஸ்டிரைக்கால் பாதிப்பு : 4.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி இழப்பு
ADDED : செப் 02, 2011 11:13 PM
பல்லடம் : கோரிக்கைகளை வலி யுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக வேலை இழந்துள்ள தறி தொழிலாளர்கள், விவசாய பணிக்கு சென்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, வேலம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் 100 சதவீத கூலி உயர்வு கேட்டு, கடந்த 30ம் தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், 1.20 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தம் செய்து, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் காரணமாக தறி தொழிலாளர்கள், சைசிங் தொழிலாளர்கள், வேன் ஓட்டுனர்கள் என பல்வேறு சார்பு தொழிலைச் சேர்ந்த நான்கு லட்சம்பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தற்காலி கமாக வேலை இழந்துள்ளனர். விவசாய வேலைக்கு செல்லும் தறித்தொழிலாளர்கள்: பல்லடம் பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இவைகளில், திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த8,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக இவர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள் ளனர். அன்றாட செலவை சமாளிக்க முடியாத விசைத்தறி தொழிலாளர்கள், மக்காச்சோளம் அறுவடை, தக்காளி, வெண்டை பறிப்பு, தென்னைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், காலிபிளவர் பறித்தல் போன்ற விவசாய கூலி தொழிலுக்கு சென்று வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் தவித்து வந்த விவசாயிகளுக்கு விசைத்தறி தொழிலாளர்கள் விவசாய பணிக்கு வருவது பேரூதவியாக உள்ளது. தறி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.200 முதல் 250 வரை விவசாயிகள் கொடுக்கின்றனர்.
துணி உற்பத்தி பாதிப்பு: கடந்த நான்கு நாளில் மட்டும் ரூ.144 கோடி மதிப்புள்ள 4.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை வாங்கி, பெட்சீட், தரை விரிப்பு, திரைச்சீலை என மதிப்பு கூட்டப்பட்ட பொரு ளாக மாற்றி, சந்தையில் விற்பனை செய்யும், மும்பை, கோல்கட்டா, சூரத், ஆமதாபாத், ராஜஸ்தான் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொங்கு மண்டலத்தில் பிரதான தொழிலாக உள்ள விசைத்தறி தொழில் பெரும் பாதிப்பை சந்தித் துள்ளது. விசைத்தறியாளர்கள் போராட்டத்தால், சிறு நூற்பாலைகளில் நூல் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மில்களில் உற்பத்தி பாதித்து, பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சங்கிலித் தொடர் போல் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில், அமைச்சர்கள் அடங்கிய குழு அமைத்து பேச்சு நடத்தி, உடனடியாக தீர்வு காண வேண்டும்,' என்று கூறியுள்ளார்.
ஏ.ஐ.டி.யு.சி., பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெகனாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விசைத்தறி தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்தாலும், 200 ரூபாய் கூட கிடைப் பதில்லை. வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டம் ஏற்படுவதால், 100 சதவீத கூலி உயர்வு வழங்க வேண் டும். தினமும் எட்டு மணி நேர வேலை என நிர்ணயம் செய்ய வேண் டும். இரவு நேர பணியை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
'இந்நிலையில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளதால், தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தலையிட்டு, 100 சதவீத கூலி உயர்வு பெற்றுத்தந்து, பிரச்னையை தீர்க்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.
எதிர்பார்ப்பு: கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே வரும் 7ல் நடக்கும் பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்படவேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.