/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற... சபதம்! முன்வந்தது 'வெற்றி' அறக்கட்டளை சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
/
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற... சபதம்! முன்வந்தது 'வெற்றி' அறக்கட்டளை சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற... சபதம்! முன்வந்தது 'வெற்றி' அறக்கட்டளை சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற... சபதம்! முன்வந்தது 'வெற்றி' அறக்கட்டளை சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
UPDATED : டிச 01, 2025 06:26 AM
ADDED : டிச 01, 2025 05:44 AM

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழில் வெளியான, நல்லாறு மீட்பு தொடர்பான தொடர் கட்டுரைகள், தொழில் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்பட பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கிராம மக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் நல்லாறு நீர்வழித்தடத்தை துார்வாரி சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்க 'வெற்றி' அறக்கட்டளை முன்வந்துள்ளது. சமூக அமைப்பினரும் கைகோர்க்க சபதம் பூண்டுள்ளனர்.
அன்னுாரின் ஒரு பகுதியில் சிறு நீரூற்றாக துவங்கி கருவலுார், அவிநாசி, சேவூர், திருமுருகன் பூண்டி மற்றும் திருப்பூரின் வடக்கு பகுதியை செழுமையடைய செய்த பெருமை, நல்லாறை சேரும்; ஆனால், இன்று, கழிவுநீரால் சூழப்பட்டு, சீரழிந்திருக்கிறது.
'தினமலர்' வெளியிட்டதொடர் கட்டுரைகள் நல்லாற்றில் நன்னீர் பாய்ந்த வரலாறு துவங்கி, மனிதர்களின் சுயநல சுரண்டலால் உருக்குலைந்த நல்லாறு, மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, கடந்த, 16 நாட்களாக, 'தினமலர்' நாளிதழில் தொடர் கட்டுரை வெளியானது. நேற்றுடன் நிறைவு பெற்ற இந்த தொடர், அரசு தரப்பில் மட்டுமின்றி, தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காணாமல் போன நல்லாறு 'வெற்றி' அறக்கட்டளை தலைவர் சிவராம் கூறியதாவது:
'மழைப்பொழிவு குறைவு, துார்வாரி பராமரிக்கப்படாதது, மிதமிஞ்சிய ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் நல்லாறு காணாமல் போயிருக்கிறது; அதை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும்' என்பதை, 'தினமலர்' தொடர் கட்டுரை சுட்டிக்காட்டியிருக்கிறது. 'வெற்றி' அறக்கட்டளை, கடந்த, 2019ல் துவங்கி, மூன்றாண்டு காலம் மேற்கொண்ட தொடர் முயற்சியால் நஞ்சராயன் குளம், அடையாளம் பெற்றது.
அதே போன்று, நல்லாறும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளோம். முதலில், நல்லாறு வழித்தடங்கள், வருவாய்த் துறையினரால் 'சர்வே' செய்யப்பட்டு அதன் எல்லை வரையறுக்கப்பட வேண்டும்; எல்லைக் கற்கள் நடப்பட வேண்டும்.
கூட்டு முயற்சியால்சாத்தியமாகும் பின், நல்லாறு வழித்தடத்தில் உள்ள ஊர் மக்கள், தன்னார்வ அமைப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் களப்பணி உதவியுடன், நல்லாறு நீர்வழித்தடத்தை துார் வாரி சுத்தம் செய்யும் பொறுப்பை 'வெற்றி' அறக்கட்டளை ஏற்க தயாராக உள்ளது; கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும்.
துார் வாரிய பின், கழிவுநீர் எங்கிருந்து வருகிறது; அதை எப்படி சரி செய்வது உள்ளிட்ட பிற பிரச்னைகளை சரி செய்வது, அரசின் பொறுப்பு. கிட்டத்தட்ட, 50 ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கும் நல்லாற்றை மீட்டெடுக்கும் முன்னெடுப்பை தற்போது துவக்கினால், அடுத்த, 10 ஆண்டுகளில் அதை 'நல்ல ஆறாக' மாற்ற முடியும்.
இவ்வாறு, சிவராம் கூறினார்.
இணைந்து பணிபுரிய
'வனம்' தயாராகிறது
சம்பத்குமார், தலைவர், அவிநாசி வனம் பவுண்டேஷன்:
'நல்லாறு துார் வாரி சுத்தம் செய்யப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை பல தரப்பினரும் முன்வைக்கின்றனர் என்பதை 'தினமலர்' தொடர் கட்டுரை வாயிலாக உணர்ந்தோம். குளம், குட்டைகளை இணைக்கும் நீர் வழித்தடங்களை துார்வாரி சுத்தம் செய்து, நீரோட்டத்தை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, நீர்வளத்துறையினரிடம் அழுத்தமாக முன்வைக்க உள்ளோம்; அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம்.அதோடு, நல்லாறு துார் வாரி சுத்தம் செய்யும் பணியில் நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்பை தெளிவுப்படுத்த வேண்டும் என, கலெக்டர் வாயிலாக, அரசுக்கு கடிதம் கொடுக்க உள்ளோம். இந்த தெளிவும், அரசின் அனுமதியும் கிடைக்கும் பட்சத்தில், வனம் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினரின் ஒருங்கிணைப்பில், பிற தன்னார்வ அமைப்பினர், நன்கொடையாளர்களை இணைத்து, நல்லாறு துார் வாரும் பணியை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறோம்.----
தமிழக அரசின்
சிறப்பு கவனம் தேவை
பாலசுப்ரமணியம், நல்லாறு பாதுகாப்பு இயக்கம்:
அடுத்த தலைமுறை வளமுடன் வாழ, நல்லாறு மீட்டெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், 'தினமலர்' நாளிதழில் வெளியான தொடர் கட்டுரை, பாராட்டுக்குரியது. நல்லாறு பாதுகாப்பு மற்றும் மீட்டெடுப்பு தொடர்பாக, நீலகிரி, திருப்பூர் எம்.பி.க்கள், தொடர்புடைய தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர், நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், பூண்டி நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு வழங்கியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அரசு நடவடிக்கையை பொறுத்து, நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை திட்டமிடப்படும்.---
நஞ்சராயன் சரணாலயமும்
ஆராய்ச்சி கூடமாகும்
ரவீந்திரன் காமாட்சி, தலைவர், திருப்பூர் இயற்கை கழகம்:
'நல்லாறு பாதுகாக்கப்பட வேண்டும்' என்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு, 'தினமலர்' நாளிதழில் தொடர் கட்டுரையாக வெளியானது, வரவேற்கத்தக்கது. இதன் வாயிலாக, அரசு மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின், 16வது பறவைகள் சரணாலயமான நஞ்சராயன் குளத்துக்கான முக்கியமான நீர் வரத்து, நல்லாறு தான். நல்லாறு துார்வாரி சுத்தம் செய்வதன் வாயிலாக, அதில் நன்னீர் வரும் பட்சத்தில் சரணாலயத்தின் தன்மை மேம்படும்; உள்நாடு மற்றும் வெளிநாடு பறவைகளின் வருகை அதிகரிக்கும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பறவை நோக்கர்களின் ஆராய்ச்சிக்கு உகந்த இடமாக அது மாறும்; அவர்களுக்குரிய தகவல்கள், அங்கு வந்து செல்லும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட சரணாலய மேம்பாடு சார்ந்த பணிகளில் இயன்ற ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.---
அதர்மத்தை சுட்டிக்காட்டிய
'தினமலர்' நாளிதழ்
முருகானந்தம், நல்லாறு பாதுகாப்பு இயக்கம்:
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மறுபடியும் தர்மம் வெல்லும் என்ற வரிகளுக்கு ஏற்ப, நல்லாறு எதிர்கொண்டுள்ள அதர்மத்தை 'தினமலர்' நாளிதழ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. நல்லாறு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களை தாங்கி வெளியான கட்டுரை, சிந்திக்க வைப்பதாக இருந்தது. நல்லாற்றின் துவக்கம் எது என்பது கூட பலருக்கும் புலப்படாத நிலையில், 'கூகுள்' தேடலில் கூட, அதன் துவக்கம் குறித்த தெளிவான தகவல் இல்லை. இந்நிலையில், நல்லாற்றின் துவக்கப் புள்ளியை தொட்டு, அதன் முடிவு எல்லை வரையிலான பயணம், நல்லாறு எதிர்கொண்டுள்ள இடிபாடுகள், சிதைவுகளை வெளிச்சம் போட்டு காட்டியது அந்த தொடர் கட்டுரை. ஆன்மிக பூமியான அவிநாசி, பூண்டியில் ஆன்மிகம் சார்ந்த நல்லாற்றை மீட்டெடுக்க துணை நிற்போம்.---
மாணவ, மாணவியரிடம்
உருவான விழிப்புணர்வு
ராஜூ, மாநில கருத்தாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்:
'நன்னீர் ஓட வேண்டிய நல்லாற்றில் சாக்கடை நீர் ஓடுகிறது; இதனால் நீர் மாசுபட்டு, மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், மீன்கள் மற்றும் தாவர இனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. குடிக்க, குளிக்க தகுதியற்றதாக அந்நீர் மாறியிருக்கிறது' என்பதை அறிவியல் பூர்வமாகவும் உணர்த்தியிருந்தது, நல்லாறு தொடர் கட்டுரை. திருப்பூரில், சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவால் தான் நொய்யல் சீர்கேடு அடைந்தது என்ற உண்மை, மாணவியரின் ஆய்வுக்கட்டுரை வாயிலாக தான் அரசின் கவனத்தை ஈர்த்தது; அதன் விளைவாகவே, சாய ஆலைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, இன்று, நொய்யல் நதி ஓரளவு காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதே போன்று நல்லாறு மீட்டெடுப்பு தொடர்பான விழிப்புணர்வும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.---
மக்கள் இயக்கமாக
மாற வேண்டும்
சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர், களம் அறக்கட்டளை:
நல்லாறு என்பது, உயிர்நீர் என்று சொல்வதில் மிகையில்லை; தற்போது நல்லாற்றின் நிலை மிக மோசமாக இருக்கிறது; இந்த சமயத்தில் நல்லாற்று வழித்தடங்களை சுத்தம் செய்து மீட்டெடுக்க இதுவே தருணம் என்பதை, 'தினமலர்' நாளிதழின் தொடர் கட்டுரை உணர்த்தியது. நல்லாறு மீட்டெடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது, கரையோரம் மரக்கன்று நட்டு, கரைகளை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும்; அதற்கு எங்களின் பங்களிப்பை வழங்க தயாராக உள்ளோம். 'தினமலர்' நாளிதழில் வெளியான நல்லாறு தொடர் கட்டுரைக்கு 'எண்ட் கார்டு' போடக்கூடாது; நல்லாறு வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நதி மீட்டெடுக்கப்படும் வரை, தொடர்ந்து செய்தி வெளியிட வேண்டும்; அப்போது, அது மக்கள் இயக்கமாக மாறும்.---
நுங்கும் நுரையுமாக
நீர் பொங்கிப்பாயுமா?
கோவிந்தசாமி, தெக்கலுார்:
நல்ல ஆறாக இருந்த நல்லாறு, உருக்குலைந்த வரலாறை சுட்டிக்காட்டிய தொடர் கட்டுரை, பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. என், மாணவ பருவத்தில் நல்லாற்றில் நான் நடந்திருக்கிறேன். ஓடை நீரில் குதித்து, குளித்து விளையாடி இருக்கிறேன். பொங்கிப் பாய்ந்த தெளிந்த நன்னீரை குடித்து வளர்ந்திருக்கிறேன்; என் வயது ஒத்த சிறுவர்களுடன் மீன் பிடித்து மகிழ்ந்திருக்கிறேன். நல்லாற்று நீரில் நெல் விளைவித்து, அறுவடை செய்த விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். நல்லாறு சங்கமிக்கும் நொய்யல் ஆற்று படுகையில், இதிகாச புராண கதைகள் நாடகமாக, வில்லுப்பாட்டாக கேட்டும், கண்டும் மகிழ்ந்திருக்கிறேன். என்னை போன்ற அனுபவம் பெற்றவர்கள், இன்றைய குழந்தைகள் மத்தியில் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டால், நல்லாற்றின் முக்கியத்துவம் அதிகமாய் உணரப்படும் என்பதையும் 'தினமலர்' தொடர் கட்டுரை உணர்த்தியது.
கோவிந்தசாமி,
தெக்கலுார்:
நல்ல ஆறாக இருந்த நல்லாறு, உருக்குலைந்த வரலாறை சுட்டிக்காட்டிய தொடர் கட்டுரை, பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. என், மாணவ பருவத்தில் நல்லாற்றில் நான் நடந்திருக்கிறேன். ஓடை நீரில் குதித்து, குளித்து விளையாடி இருக்கிறேன். பொங்கிப் பாய்ந்த தெளிந்த நன்னீரை குடித்து வளர்ந்திருக்கிறேன்; என் வயது ஒத்த சிறுவர்களுடன் மீன் பிடித்து மகிழ்ந்திருக்கிறேன். நல்லாற்று நீரில் நெல் விளைவித்து, அறுவடை செய்த விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். நல்லாறு சங்கமிக்கும் நொய்யல் ஆற்று படுகையில், இதிகாச புராண கதைகள் நாடகமாக, வில்லுப்பாட்டாக கேட்டும், கண்டும் மகிழ்ந்திருக்கிறேன். என்னை போன்ற அனுபவம் பெற்றவர்கள், இன்றைய குழந்தைகள் மத்தியில் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டால், நல்லாற்றின் முக்கியத்துவம் அதிகமாய் உணரப்படும் என்பதையும் 'தினமலர்' தொடர் கட்டுரை உணர்த்தியது.

