/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம்; விழாக்கோலம் பூண்ட உடுமலை
/
மாரியம்மன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம்; விழாக்கோலம் பூண்ட உடுமலை
மாரியம்மன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம்; விழாக்கோலம் பூண்ட உடுமலை
மாரியம்மன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம்; விழாக்கோலம் பூண்ட உடுமலை
ADDED : ஏப் 16, 2025 10:43 PM

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடக்கிறது.
உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, கம்பம் போடுதல், கொடியேற்றம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம் என பல்வேறு வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேப்பிலை, மஞ்சளுடன், தீர்த்தம் எடுத்து வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றியும், நேர்த்திக்கடனாக, பூவோடு எடுத்து வந்தும் வழிபட்டு வந்தனர்.
திருவிழாவில் நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் துவங்கியது. நுாற்றுக் கணக்கான பெண்கள், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து வழிபட்டனர்.
பிற்பகல், 3:00 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க, சூலத்தேவர் சுவாமியுடன் அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. கோவில் வளாகத்தில், திருமண பந்தல், மலர் அலங்காரம், பக்தர்கள் கூட்டம் என கோவில் வளாகம் களை கட்டியிருந்தது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று நடக்கிறது. இதற்காக அம்மன் திருவீதி உலா வரும் திருத்தேர் தயார் செய்து, முழுவதும் மலர் அலங்காரங்களுடன், வாழை, மாவிலை தோரணத்துடன் தயார் நிலையில் உள்ளது.
இன்று காலை, 6:45 மணிக்கு, மகா சக்தி மாரியம்மன், சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம், 4:15 மணிக்கு, திருத்தேரோட்டமும் நடக்கிறது.
இதற்காக, தேர் வீதிகள் தயார் செய்யப்பட்டு, போலீஸ் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில், திருத்தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் என தேர்த்திருவிழாவால், நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.