/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவிக்க விடும் தக்காளி!: நோய் தாக்குதலால் மகசூல் குறைவு : விலையும் சரிவால் கடும் பாதிப்பு
/
தவிக்க விடும் தக்காளி!: நோய் தாக்குதலால் மகசூல் குறைவு : விலையும் சரிவால் கடும் பாதிப்பு
தவிக்க விடும் தக்காளி!: நோய் தாக்குதலால் மகசூல் குறைவு : விலையும் சரிவால் கடும் பாதிப்பு
தவிக்க விடும் தக்காளி!: நோய் தாக்குதலால் மகசூல் குறைவு : விலையும் சரிவால் கடும் பாதிப்பு
UPDATED : பிப் 06, 2026 06:19 AM
ADDED : பிப் 06, 2026 05:36 AM

உடுமலை: உடுமலை பகுதிகளில் தக்காளி மகசூல், 90 சதவீதம் வரை பாதித்துள்ள நிலையில், விலையும் சரிந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டு முழுவதும் இப்பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், விளையும் காய்கறிகள், உடுமலை மொத்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
நடப்பு சீசனில் தக்காளி நடவு செய்த விவசாயிகள், சீதோஷ்ண நிலை மாற்றம், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, வைரஸ் நோய் மற்றும் ஊசி புழு தாக்குதல் காரணமாக கடுமையாக பாதித்துள்ளனர். இதனால், வழக்கமாக கிடைக்கும் மகசூலை விட, 90 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இந்நிலையில், உடுமலை சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து காணப்படுவதால், விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், சாகுபடி செலவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு, பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாத நிலையில், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வைரஸ் தாக்குதல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி கூறியதாவது:
தக்காளி சாகுபடியில் ஆண்டு முழுவதும் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தக்காளி நடவு செய்த விவசாயிகள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
தற்போது, வெயிலின் தாக்கம், பனிப்பொழிவு அதிகரிப்பு என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பயிர்கள் பாதித்த நிலையில், புதிய வகை வைரஸ் நோய் தாக்குதலும் கடுமையாக உள்ளது.
40 நாட்கள் வரை வளர்ந்த செடிகள், பூக்கும் பருவத்தில், வைரஸ் தாக்கி, மொத்தமாக பாதித்து வருகிறது.
வழக்கமாக, தக்காளிக்கு, இலைக்கருகல், பூச்சி தாக்குதல், வேர்வாடல் நோய், ஊசி புழு தாக்குதலுக்கு என மருந்து அடிக்கும் நிலையில், தற்போதைய நோய்த்தாக்குதலை, எந்த மருந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பல முறை மருந்து அடித்தும் பயனில்லை.
இதனால், செடி நடவு செய்து, 60 நாள் முதல், 110 நாள் வரை, 6 முதல் ஏழு பறிப்புகள் வரை, 1,100 பெட்டிகள் வரை மகசூல் இருக்கும். ஆனால், தற்போது இரு பறிப்புகளில், 150 பெட்ட கூட மகசூல் இல்லை.
தக்காளிக்கு, ஏக்கருக்கு ரூ.50 முதல் 60 ஆயிரம் வரை செலவழித்த நிலையில், தற்போது மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதித்து வருகின்றனர். இந்நிலையில், பிற மாநில வரத்து காரணமாக, தக்காளி விலையும் கடுமையாக சரிந்துள்ளது.
14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி, ரூ.600ல் இருந்து சரிந்து, தற்போது, ரூ. 200 வரை மட்டுமே விற்கப்படுகிறது.பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம், கமிஷன் கூலி கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில் தக்காளி சாகுபடி அதிகளவு உள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்,நோய்த்தாக்குதலுக்கு உரிய காரணிகளை கண்டறிந்து, அதற்குரிய தொழில் நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
இரு ஆண்டாக, தக்காளி சாகுபடியில் நோய் தாக்குதல் பெரும் பிரச்னையாக உள்ளது. அதே போல், தக்காளி வரத்து அதிகரிக்கும் போது, விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, விற்பனை வாய்ப்புகள், குளிர்பதன கிடங்கு வசதி, தக்காளி சாஸ், ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

