/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்வு
/
வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்வு
ADDED : நவ 25, 2025 06:44 AM
திருப்பூர்: தொடர் மழையால், சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை அதிகரித்து விற்கப்பட்டது.
திருப்பூர் உழவர் சந்தையில் இம்மாத துவக்கத்தில், தக்காளி கிலோ, 25 - 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பத்து நாட்களுக்கு முன் மழை காரணமாக, தக்காளி வரத்து மெல்ல குறைய துவங்கியது. வழக்கமாக, தெற்கு உழவர் சந்தைக்கு, 25 டன் தக்காளி விற்பனைக்கு வரும். நேற்று, 22 டன் மட்டுமே வந்தது; 3,000 கிலோ தக்காளி விற்பனைக்கு வராததால், தக்காளி விலை கிலோவுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 50 ரூபாயை எட்டிபிடித்தது.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வடக்கு உழவர் சந்தைக்கு, 1,750 கிலோ தக்காளி வந்தது; கிலோ, 55 ரூபாய்க்கு விற்றது. தெற்கு உழவர் சந்தையிலேயே கிலோ, 50 - 60 ரூபாய்க்கும் விற்கும் நிலையில், மொத்த மார்க்கெட்டில், 65 ரூபாய், சில்லறை விலையில், 70 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.
உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'மழையால், ஒரு மாதமாகவே வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையால் செடிகளில் பூக்கள் உதிர்ந்து, காய்ப்பு குறைந்துள்ளது. வரும் நாட்களில் மழை குறைய விட்டால், தக்காளி விலை மேலும் உயரவாய்ப்புள்ளது,' என்றனர்.

