/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயரும் தக்காளி விலை; பருவ மழையால் கொடி கட்டி சாகுபடி
/
உயரும் தக்காளி விலை; பருவ மழையால் கொடி கட்டி சாகுபடி
உயரும் தக்காளி விலை; பருவ மழையால் கொடி கட்டி சாகுபடி
உயரும் தக்காளி விலை; பருவ மழையால் கொடி கட்டி சாகுபடி
ADDED : அக் 10, 2025 12:22 AM

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள மொத்த விற்பனை கமிஷன் மண்டிகளில், ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாதமாக தக்காளி வரத்து அதிகரித்த நிலையில், விலை கடும் சரிவை சந்தித்தது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 100 முதல், 150 ரூபாய் வரை மட்டுமே விற்றது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், மகசூல் பெருமளவு குறைந்த நிலையில், விலையும் சரிவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாத நிலையில், பல பகுதிகளில் விவசாயிகள் செடிகளிலிருந்து காய்களை பறிக்காமல், அப்படியே விட்டனர்.
இந்நிலையில், தக்காளி சீசன் குறைந்து, இரு மாதத்திற்கு முன் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை துவங்கியுள்ளது.
விற்பனைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் தக்காளி இல்லாத நிலையில், வியாபாரிகள் அதிகளவு உடுமலைக்கு வந்து, தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால், கடந்த மூன்று வாரமாக தக்காளி விலை மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, ரூ. 200 முதல், 250 வரை ஏலம் போனது. தக்காளி விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தற்போது பருவ மழை துவங்கியுள்ளதால், செடி முறையில் சாகுபடி செய்தால், மழைக்கு தாங்காமல் செடிகள் பாதிக்கும். அதனால், கூடுதல் செலவு பிடிக்கும் கொடி கட்டுதல் முறையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறையும் போது, மேலும் விலை உயரும் வாய்ப்புள்ளது,' என்றனர்.