ADDED : ஏப் 25, 2026 08:03 PM
திருப்பூர்:குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது வரத்து குறைவால் திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இதனால், 'ஐந்து கிலோ 100 ரூபாய்' என வீதி வீதியாகக் கூவி விற்ற ஆட்டோக்களும், ரோட்டோரக் கடைகளும் தற்போது மாயமாகியுள்ளன.
விலை நிலவரம்: உழவர் சந்தை: கிலோ 34 - 36 ரூபாய்; வெளிச்சந்தை (சில்லறை): கிலோ 45 ரூபாய் வரை விற்பனை.
தேர்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பினாலும், கடும் வெயில் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் மற்றும் உழவர் சந்தைகளுக்கு வரும் தக்காளியின் அளவு, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 டன் வரை குறைந்துள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் எங்களுக்குக் கட்டுப்படியாகும். தற்போதைய விலையில் வாங்கி, வாகனத்திற்கு டீசல் அடித்து ஊர் ஊராகச் சுற்றினால் நஷ்டம் தான் மிஞ்சும் என ஆட்டோ வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தக்காளி விலை உயர்வால், மற்ற காய்கறிகளின் விலையும் ஏறும் அபாயம் உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
---
