ADDED : ஏப் 25, 2026 08:05 PM
திருப்பூர்: குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது வரத்து குறைவால் திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இதனால், 'ஐந்து கிலோ 100 ரூபாய்' என வீதி வீதியாகக் கூவி விற்ற ஆட்டோக்களும், ரோட்டோரக் கடைகளும் தற்போது மாயமாகியுள்ளன.
விலை நிலவரம் உழவர் சந்தை: கிலோ 34 - 36 ரூபாய்; வெளிச்சந்தை (சில்லறை): கிலோ 45 ரூபாய் வரை விற்பனை.
தேர்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பினாலும், கடும் வெயில் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் மற்றும் உழவர் சந்தைகளுக்கு வரும் தக்காளியின் அளவு, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 டன் வரை குறைந்துள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் எங்களுக்குக் கட்டுப்படியாகும் என ஆட்டோ வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தக்காளி விலை உயர்வால், மற்ற காய்கறிகளின் விலையும் ஏறும் அபாயம் உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
--
ஓட்டு எண்ணிக்கைக்கு இப்போதிருந்தே ஆயத்தம்
திருப்பூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' உறங்கிக் கொண்டிருந்தாலும், அரசியல் களத்தில் துாக்கம் தொலைத்து நிற்கிறார்கள் வேட்பாளர்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் திறந்து மக்களின் தீர்ப்பை அறியத் தேர்தல் ஆணையம் இப்போதிருந்தே ஆயத்தமாகிவருகிறது.
பரபரப்பான வாக்குப்பதிவு திருவிழா ஒருவழியாக ஓய்ந்தது. சற்று இளைப்பாறிய தேர்தல் ஆணையம், இப்போது அடுத்தகட்டத்துக்காக ஆயத்தமாகிவிட்டது. திருப்பூரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த 'மந்திரப் பெட்டிகள்' (மின்னணு வாக்கு இயந்திரங்கள்) இப்போது எல்.ஆர்.ஜி கல்லுாரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் நிசப்தமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றைச் சுற்றியிருக்கும் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி முனைகளும், போலீசாரின் விழிகளும் ஒரு நிமிடம் கூட இமைப்பதில்லை.
கவுன்ட் டவுன் ஸ்டார்ட் இன்னும் ஏழே நாட்கள்... மே 4-ம் தேதி மேஜிக் நடக்கப்போகிறது. மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கும் சேர்த்து 2,822 வாக்குச்சாவடிகள். இத்தனை இயந்திரங்களையும் ஒவ்வொன்றாகத் திறந்து மக்களின் தீர்ப்பைப் படிக்க, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் களம் அமைக்கப்படுகிறது. 'ஸ்ட்ராங் ரூம்'களின் இரும்புக்கதவுகளைத் திறந்து, இயந்திரங்களைக் கவனமாகக் கொண்டு வந்து மேஜைகளில் சேர்க்கவே 20 கிராம உதவியாளர்கள் கொண்ட ஒரு படை தயாராக இருக்கிறது. ஒரு இயந்திரம் கூடக் கண்ணில் படாமல் தப்ப முடியாது; ஏனென்றால் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு 'மைக்ரோ அப்சர்வர்', கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் என மூன்று ஜோடி கண்கள் துல்லியமாகக் கண்காணிக்கும்.
அனல் பறக்கும் பல்லடம் வாக்கு எண்ணிக்கையில் இந்த முறை பல்லடம் தொகுதிதான் 'மெகா' மேட்ச். அங்குள்ள அதிகப்படியான வாக்குச்சாவடிகளால் மொத்தம் 35 சுற்றுகள் வரை எண்ணப்பட வேண்டியிருக்கும். அதற்கு அடுத்தபடியாகத் திருப்பூர் வடக்கு 32 சுற்றுகள், அவிநாசி 27 என நீள்கிறது பட்டியல். ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் வெளியாகும் முடிவுகள், வேட்பாளர்களின் இதயத் துடிப்பை எகிற வைக்கப்போவது நிச்சயம். தபால் வாக்குகளை எண்ணுவதற்காகவே தனி மையங்களும், விசேஷ மேஜைகளும் தயாராகி வருகின்றன.
கேமரா பிடியில்மேஜைகள் 'இந்த முறை ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா உண்டு' எனத் தேர்தல் அலுவலர்கள் 'கெத்து' காட்டுகிறார்கள். முறைகேடுகளுக்குச் சிறிதும் இடமின்றிப் பயிற்சி வகுப்புகளும் தொடங்கவுள்ளன. எல்.ஆர்.ஜி கல்லுாரி இப்போது நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் ஒரு கோட்டை போலக் காட்சியளிக்கிறது.
--
நிர்வாகிகள் பாக்கெட்டுக்கு போனதா கரன்சி?
திருப்பூர்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாத திருப்பூர் மாவட்டத்தில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தேர்தல் திருவிழா ஒருவழியாக ஓய்ந்திருக்கிறது.
ஆனால், வேட்பாளர்களின் மனதில் இன்னும் தேர்தல் ஜுரம் குறையவில்லை. கடும் போட்டி, ஆறாக ஓடிய பணம், புதிய கட்சிகளின் வரவு எனப் பல காரணிகள் வேட்பாளர்களின் துாக்கத்தைக் கலைத்து, 'நிம்மதி கலந்த பதற்றத்தில்' அவர்களை ஆழ்த்தியுள்ளன.
தி.மு.க. தரப்பில் 'சிட்டிங்' அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் என ஏற்கனவே 'அதிகாரத்தின்' உச்சத்தில் வலம் வந்தவர்கள், அந்தப் பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளக் கடும் முனைப்புக் காட்டினர். தங்கள் பதவிக்காலத்தில் செய்த வளர்ச்சிப் பணிகளே தங்களைக் கரைசேர்க்கும் என அவர்கள் மலைபோல நம்புகின்றனர்.
மறுபுறம், அ.தி.மு.க.-வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தன், ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்தியபாமா மற்றும் பா.ஜ. சார்பில் களமிறங்கிய மத்திய அமைச்சர் முருகன், கவுன்சிலர் தங்கராஜ் என 'வி.ஐ.பி' பட்டாளமே களத்தில் நின்றதால், வெற்றி யாருக்கு என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
வழக்கமான வாக்கு வங்கிகளைத் தாண்டி, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிய வரவான த.வெ.க. ஆகியவை தேர்தல் களத்தில் உஷ்ணத்தை ஏற்றியுள்ளன. வார்டு தோறும் ஒலித்த 'விசில்' சத்தமும், த.வெ.க-.வுக்கு விழுந்ததாகக் கருதப்படும் வாக்குகளும் தி.மு.க . - அ.தி.மு.க ஆகிய இரு தரப்பிற்குமே மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. “மாற்றம் வேண்டும் எனத் துடிக்கும் இளைஞர்களின் ஓட்டுகள் தான் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும்” என த.வெ.க-வினர் நம்பிக்கையுடன் முழங்குகின்றனர்.
நள்ளிரவு 'பஞ்சாயத்துகள்': தேர்தல் முடிந்த கையோடு, ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் அழைத்து நள்ளிரவு வரை வேட்பாளர்கள் 'ஆபரேஷன் போஸ்ட்மார்ட்டம்' நடத்தினர்.
தி.மு.க. கணக்கு: “கடைசி நேர 'கவனிப்புகள்' கைகொடுக்கும். அ.தி.மு.க-.வின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்ணில், இரட்டை இலை வாக்குகளையே மடை மாற்றியிருக்கிறோம்” என்பது இவர்களின் தெம்பான பேச்சு.
அ.தி.மு.க. நம்பிக்கை: “எதிர்த்தரப்பு பணத்தை வாரி இறைத்தாலும், இரட்டை இலை சின்னத்தின் மீதான மக்களின் விசுவாசம் எங்களைக் கைவிடாது” என அடிமட்டத் தொண்டர்கள் உறுதி கூறுகின்றனர்.
இதற்கிடையே, கட்சி மேலிடம் கொடுத்த 'கவனிப்பு' பணம் முழுமையாக வாக்காளர்களுக்குச் சென்றதா அல்லது நிர்வாகிகள் 'பாக்கெட்'டில் போய்ச் சேர்ந்ததா என்ற உள்விவகார விசாரணைகளும் டீக்கடை பெஞ்ச்கள் வரை சூடாக நடந்து வருகின்றன. வரும் மே 4-ம் தேதி வரை இந்த 'நிம்மதி கலந்த பதற்றம்' வேட்பாளர்களைத் துரத்தப்போவது உறுதி!
---
உத்தமலிங்கேஸ்வரர் கோவில்
தேர்த்திருவிழா கொடியேற்றம்
திருப்பூர்: பெருமாநல்லுாரில் உள்ள கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டன.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. சோமாஸ்கந்தர் தாயாருடன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு மண்டப கட்டளை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழுத் தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
திருவிழா அட்டவணை n 29ம் தேதி (புதன்): இரவு 8:00 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல்.
n 30ம் தேதி (வியாழன்): இரவு சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம்.
n மே 1 (வெள்ளி): திருத்தேர் வடம் பிடித்தல் மாலை 3:30 மணிக்கு நடைபெறுகிறது.
n மே 2 (சனி): இரவு 8:00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குச் செல்லுதல்.
n மே 3 (ஞாயிறு): காலை 9:00 மணிக்குச் சுவாமி சிறப்பு தரிசனம் மற்றும் நடராஜர் அபிஷேகம்.
n மே 4 (திங்கள்): காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவு.
---
பல்லடம் வெற்றிவாய்ப்பு நுாலிழையில் மாறலாம்
பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தின் மெகா தொகுதியான பல்லடம், இந்த முறை தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த 1957 முதல் நடந்த எந்தவொரு தேர்தலிலும் இல்லாத வகையில், முன்னெப்போதும் இல்லாத உச்சமாக 90.48 சதவீத வாக்குகள் பதிவாகி, ஒட்டுமொத்த அரசியல் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியுள்ளது.
இரட்டை இலையும்நம்பிக்கையும் 1977 முதல் நடந்த தேர்தல்களில் 9 முறை வென்று, பல்லடத்தைத் தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருக்கிறதுஅ.தி.மு.க. தற்போதைய எம்.எல்.ஏ ஆனந்தன் தொகுதிக்கு பெரிய அளவிலான நலத்திட்டங்களை கொண்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவினாலும், அ.தி.மு.க. ஆட்சியின் பழைய சாதனைகளும், 'ஆனைமலையாறு - நல்லாறு' திட்ட வாக்குறுதியும் விவசாயிகளின் மத்தியில் பலத்த நம்பிக்கையை விதைத்துள்ளது. தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி ஓட்டுகளை அறுவடை செய்து, மீண்டும் இக்கோட்டையைத் தக்கவைப்போம் எனத் தெம்பாக இருக்கின்றனர் வேட்பாளர் பரமசிவம் மற்றும்அ.தி.மு.க.-வினர்.
தி.மு.க.வின்பலம் என்ன? மறுபுறம், கட்சியின் உள்ளடி வேலைகளையும் அதிருப்திகளையும் தவிடுபொடியாக்கி விட்டு, 'உறவுக்குக் கை கொடுப்போம்' என்ற முழக்கத்தோடு களமிறங்கியிருந்தார் செல்வராஜ்.
தி.மு.க-வின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இவருக்கு மிகப்பெரிய பலம்.
ஆளுங்கட்சி மீதான சிறு அதிருப்திகள் இருந்தாலும், பெண்களின் ஓட்டுகள் தங்களைக் கரை சேர்க்கும் என உறுதியாக நம்புகிறது தி.மு.க. முகாம்.
விஜய் காரணியாருக்குப் பாதிப்பு? இந்த மெகா மோதலுக்கு இடையே, த.வெ.க-.வின் ராம்குமார் மற்றும் நா.த.க-.வின் தமிழினியன் பிரிக்கும் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போகின்றன.
குறிப்பாக, 2.36 சதவீத முதன்முறை வாக்காளர்களும், இளைஞர்களும் த.வெ.க பக்கம் சாய்ந்தால், அது இரு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியிலும் பெரிய ஓட்டையைப் போடும்.
இதுவரை இத்தொகுதியில் அ.தி.மு.க. 9 முறையும், தி.மு.க. 2 முறையும் வென்றுள்ளன. இந்த முறை 30 முதல் 40 ஆயிரம் வாக்குகள் வரை மூன்றாம் தரப்புக்குச் சென்றால், வெற்றி யாருக்கு என்பது நுாலிழை வித்தியாசத்தில் தான் அமையும்.
----
'நீட்' தேர்வு மாணவருக்கு இன்று ஹால் டிக்கெட்
திருப்பூர்: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான 'நீட்' எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்படுகிறது.
தேர்விற்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டது முதல், மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஆறு அரசுப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டுகளை https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வெழுதும் மாணவர்களின் முழுமையான விபரங்கள் வரும் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளன.
வரும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கடைசி நேரப் பதற்றமின்றி மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைத் தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.
---
ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆராதனா விழா
'மக்கள் சேவை'யாக மகோன்னதம்
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாய் சேவா மையம் ஆன்மிகக் கடலில் மூழ்கியது.
பி.என். ரோடு, ராம் நகரில் உள்ள சாய் மந்திரில், பக்தி மணமும் சேவைக் குணமும் ஒன்றிணைந்த ஒரு தெய்வீகத் திருவிழாவாகவே இது அரங்கேறியது.
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஓம்கார நாதமும், சுப்ரபாதமும் ஒலிக்க, 'நகர சங்கீர்த்தனம்' நடந்தது.
பாபாவின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பக்தர்கள் வீதிகளில் வலம் வந்த காட்சி, திருப்பூரை ஒரு சிறு பிரசாந்தி நிலையமாகவே மாற்றியது. கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு, பிரசாந்தி கொடி ஏற்றப்பட்டது.
'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற பாபாவின் பொன்மொழிக்கேற்ப, இரவு முதலே பக்தர்கள் நாராயண சேவைக்கான (அன்னதானம்) பணிகளில் ஈடுபட்டனர்.
காலை 11:30 மணிக்குத் தொடங்கிய நாராயண சேவையில் 1,100 பக்தர்கள் கலந்துகொண்டு பிரசாதத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர்.
மாலை 5:30 மணிக்கு வேத பாராயணமும், உள்ளத்தை உருக்கும் சிறப்பு பஜனையும் நடைபெற்றன. தேசிய தலைமை தத்துவத் திட்டத்தின் மாணவரும், முன்னாள் பால விகாஸ் மாணவருமான காளி விக்னேஷ் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு, பக்தர்களுக்குப் பாபாவின் போதனைகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியது. இறுதியாக, மகா மங்கள ஆரத்தியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
ஆராதனா தினச் சிறப்போடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க, சித்திரை மாதம் முழுவதும் 'நீர்மோர்' வழங்கும் சேவையையும் சத்யசாய் சேவா மையத்தினர் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.
---
கறிக்கோழி பண்ணைகளுக்கு
தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில் கறிக்கோழி வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக 45 நாட்களுக்கு மேல் வளர்க்கப்படும் கறிக்கோழிகளை முறையாகப் பராமரித்தால் மட்டுமே நல்ல எடையும் ஆரோக்கியமும் கிடைக்கும். இதற்குத் தீவனம், தண்ணீர் மற்றும் காற்றோட்ட வசதி அவசியமான தேவைகளாக உள்ளன.
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், கோழிகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப அயற்சி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க அவை குடிப்பதற்கு மட்டுமின்றி, பண்ணையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பண்ணைகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
பண்ணை விவசாயிகள் கூறுகையில், ''சாதாரண நாட்களை விடக் கோடை காலத்தில் கறிக்கோழிகள் அதிகத் தண்ணீர் குடிப்பதுடன், அவற்றைக் குளிர்விக்கவும் கூடுதல் தண்ணீர் செலவாகிறது.
தற்போது ஒரு லிட்டர் 10 பைசா வீதம் லாரிகள் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். கோடையில் கோழிகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்கத் தவறினால், அவை உயிரிழக்க நேரிடும். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் தற்போது தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால், லாரிகளில் விற்கப்படும் தண்ணீரின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் ஓரளவாவது உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு குறையும்.
மழை பெய்யத் தவறினால் கறிக்கோழிகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகும்'' என்கின்றனர்.
----
வடக்கில் வாகை சூடுவது யார்?
ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கணக்கு
திருப்பூர்: திருப்பூர் வடக்கு... எப்போதும் அரசியல் சுறுசுறுப்புடன் இருக்கும் இந்தத் தொகுதியின் தேர்தல் களம், இம்முறை ஒரு விசித்திரமான கணக்கை முன்வைத்திருக்கிறது.
கடந்த தேர்தல்களை விட இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் கிடுகிடுவென உயர்ந்து, 82.99 சதவீதத்தை எட்டி யுள்ளது. ஆனால், இந்த எழுச்சிக்குப் பின்னால் ஒரு டெக்னிக்கல் 'ட்விஸ்ட்' இருக்கிறது எனக் கிசுகிசுக்கிறார்கள் அரசியல் புள்ளிகள்.
உண்மையில் வாக்குப்பதிவு எகிறியதா அல்லது வாக்காளர் பட்டியல் சுருங்கியதா?
இதுதான் இப்போதைய விவாதப் பொருள். எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணியின் போது, 72 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால், பதிவான வாக்குகள் சதவீத அடிப்படையில் அதிகமாகத் தெரிகிறது.
கடந்த 2021-ல் வெறும் 62.44 சதவீதத்தில் தவித்த வடக்கு தொகுதி, இந்த முறை 80 சதவீதத்தைக் கடந்து நிற்பது ஒரு மாயத் தோற்றமே என்கிறார்கள்.
இருந்தாலும், கடந்த முறையை விட கூடுதலாகப் பதிவாகியுள்ள 25,372 ஓட்டுகள் யாருடைய பெட்டிக்குள் விழுந்தது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
நம்பிக்கையுடன்காத்திருப்பு இந்தத் தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கணக்குப் போட்டுக் காத்திருக்கிறது.
கம்யூனிஸ்ட் 'தோழர்கள்': “கடந்த ஐந்து ஆண்டுகளில் இணைந்த 15 ஆயிரம் புது வாக்காளர்களும், மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்களும் எங்களைத்தான் கைதுாக்கி விடுவார்கள். இது எங்கள் மூன்றாவது முயற்சி, இம்முறை வெற்றி உறுதி” எனத் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.
அ.தி.மு.க. தரப்பு: “எங்கள் கோட்டை இது! கடந்த முறை கிடைத்த ஓட்டுகள் அப்படியே இருக்கிறது. ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களின் கூடுதல் ஓட்டுகளும் எங்களுக்குத்தான் கிடைக்கும். நான்காவது முறையாக வடக்கில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுவோம்!” எனத் தெம்பாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு நடுவே த.வெ.க.வினர் தங்களை நோக்கித் திரும்பியுள்ள இளைஞர் பட்டாளத்தையும், இளம்பெண்களின் ஆதரவையும் மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியினரோ, தங்களின் வழக்கமான வளர்ச்சி ஓட்டுகளுடன் இந்த முறை இளைஞர் சக்தியின் ஆதரவு பெரிய வெற்றியைத் தேடித்தரும் எனக் கணக்குப் போடுகின்றனர்.
கிளம்பிய புகார்கள் மாநகராட்சியின் 29 வார்டுகள் ஒருபுறம், 10 ஊராட்சிகள் மறுபுறம் எனப் பிரிந்து கிடக்கும் ஓட்டுகளில், இன்னும் நீக்கப்படாத இறந்தவர்கள் மற்றும் வெளியூர் வாக்காளர்களின் பெயர்கள் சில குளறுபடிகளைச் செய்துள்ளதாகப் புகார்கள் கிளம்பினாலும், களத்தில் அ.தி.மு.க -- இந்திய கம்யூனிஸ்ட் இடையேதான் நேரடி மோதல்தான் தென்பட்டது.
இருப்பினும், த.வெ.க. பெருமளவு ஓட்டுகளை அள்ளும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. நான்கு முனைப் போட்டி யில் சிக்கியுள்ள திருப்பூர் வடக்கின் 'வாகை' சூடப்போகும் வேட்பாளர் யார்? மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை திருப்பூர் வடக்கின் தெருக்களில் இந்த விவாதம் ஓய்வதாக இல்லை!
