/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையிலும் தக்காளி உற்பத்தி; கொடி கட்டும் விவசாயிகள்
/
மழையிலும் தக்காளி உற்பத்தி; கொடி கட்டும் விவசாயிகள்
மழையிலும் தக்காளி உற்பத்தி; கொடி கட்டும் விவசாயிகள்
மழையிலும் தக்காளி உற்பத்தி; கொடி கட்டும் விவசாயிகள்
ADDED : அக் 25, 2024 09:47 PM

உடுமலை: தொடர் மழைக்காலத்திலும், தரமான தக்காளி உற்பத்தி செய்ய கொடிக்கட்டுதல் முறையை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் சீதோஷ்ண நிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், தக்காளி உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. சந்தைக்கு வரத்து குறைந்து, விலை உச்சத்தை தொட்டது.
அதன்பின்னர், சாகுபடி பரப்பு அதிகரித்து, தற்போது, அதிக உற்பத்தி காரணமாக தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சீசனில், சீரான உற்பத்தி இருக்க பல்வேறு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மழைக்காலத்தில், தக்காளியின் தரம் குறைவதை தடுக்க, கொடி கட்டுதல் முறையை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றுகின்றனர். இம்முறையில், 5 செடிகளுக்கு இடையில் குச்சி நட்டு, மேல்பகுதியில், சணல் கயிறு வாயிலாக இணைக்கப்படுகிறது.
காய்ப்புக்கு வந்த பிறகு, செடியின் கிளையை மேல்கயிறுடன் இணைக்கின்றனர். இதனால், செடிகள் காற்று மற்றும் மழையால், கீழே சாயாமல், தடுக்கப்படுகிறது. மழைக்காலத்தில், காய்கள் தரையில் படாமல் இருப்பதால், அழுகல் தவிர்க்கப்படுகிறது.
ஆனால், இந்த தொழில்நுட்பத்துக்கு, தேவையான பொருட்கள் வாங்கவும், தொழிலாளர் தேவையும் கூடுதலாக தேவைப்படுவதால், அதிக செலவு பிடிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், இந்த முறையை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளதால், பருவமழை காலத்திலும், தக்காளி உற்பத்தி பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.