/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீசனால் தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்ந்து வருகிறது
/
சீசனால் தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்ந்து வருகிறது
சீசனால் தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்ந்து வருகிறது
சீசனால் தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்ந்து வருகிறது
ADDED : ஜூலை 11, 2025 11:58 PM

உடுமலை; உடுமலையில், தக்காளி வரத்து சீசன் துவங்கியுள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருகிறது.
உடுமலை, மடத்துகுளம், குடிமங்கலம் பகுதிகளில், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளையும் காய்கறிகள், உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா மாநிலம் மறையூர் மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கோடை காலத்தில், தக்காளி சாகுபடி வரத்து குறைந்து காணப்பட்டது.
தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து, உடுமலை பகுதிகளில் விவசாயிகள் மீண்டும் தக்காளி சாகுபடியை துவக்கினர். இரு மாதத்திற்கு முன் நடவு செய்த, தக்காளி வரத்து தற்போது துவங்கியுள்ளது.
உடுமலை பகுதிகளில், தக்காளி சீசன் துவங்கியுள்ள நிலையில்,வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, 18 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்பட்டது. வரத்து அதிகரித்தாலும், வியாபாரிகள் வருகையும் அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம், 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ.200 வரை மட்டுமே விற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. நேற்று, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, ரூ. 300 வரை விற்பனையானது.
வியாபாரிகள் கூறியதாவது : உடுமலை பகுதிகளில், தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளி வரத்து தற்போது துவங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் தக்காளி சாகுபடி இல்லாததால், வியாபாரிகள் வரத்தும் அதிகரித்துள்ளது.
தற்போது, சந்தைக்கு வரும் தக்காளி தரமாக உள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தக்காளி தரம் மற்றும் வெளி மாநில வரத்து குறைவால், உடுமலையில் தக்காளிக்கு திருப்தியான விலை இருக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.