/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளிக்கு விலையில்லை; ரோட்டோரத்தில் குவிப்பு
/
தக்காளிக்கு விலையில்லை; ரோட்டோரத்தில் குவிப்பு
ADDED : செப் 09, 2025 06:24 AM

உடுமலை; உடுமலை பகுதிகளில் தக்காளி மகசூல் 90 சதவீதம் பாதித்துள்ள நிலையில், விலையும் சரிந்ததால், ரோட்டோரத்தில் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை துவங்கியுள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றம், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, வைரஸ் நோய் மற்றும் ஊசி புழு தாக்குதல் காரணமாக, மகசூல், 90 சதவீதம் பாதித்துள்ளது. இந்நிலையில், விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளதால், சாகுபடி செலவு கூட கிடைக்காமல், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி கூறியதாவது:
நடப்பு பருவத்தில் வெயிலின் தாக்கம், நோய் தாக்குதல் காரணமாக, ஏக்கருக்கு ரூ.40 - 75 ஆயிரம் செலவு அதிகரித்தது.
வழக்கமாக ஒரு ஏக்கருக்கு, 14 கிலோ கொண்ட, ஆயிரம் பெட்டிகள் வரை மகசூல் இருக்கும். நடப்பு சீசனில், காய்கள் சிறுத்து, அழுகல் உள்ளிட்ட காரணங்களினால், 100 பெட்டி கூட மகசூல் கிடைக்கவில்லை.
ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தரமான தக்காளி வரத்து உள்ளதால், பிற மாவட்ட விவசாயிகள் வருகை இல்லாததால், 14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி, ரூ.700ல் இருந்து சரிந்து, தற்போது, ரூ. 100 -- 150 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம், கமிஷன் கூலி கூட கட்டுபடியாகாததால் செடிகளில் பறிக்காமல் விட்டுள்ளனர். பறித்த தக்காளியை ரோட்டோரத்தில் வீசும் அவல நிலை உள்ளது.
அதிக சாகுபடி பரப்பு இருந்தும், அதிகாரிகள் - விவசாயிகள் தொடர்பு இல்லாததே இந்த சிக்கலுக்கு காரணமாகும். மேலும், வரத்து அதிகரிக்கும் போது, விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, விற்பனை வாய்ப்புகள், குளிர்பதன கிடங்கு வசதி, தக்காளி சாஸ், ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி வாய்ப்புகளும் இல்லை.
உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.