/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மறுதினம் வட்ட வட்டப் புள்ளாரே... வடிவெடுத்த புள்ளாரே! காணும் பொங்கல் களைகட்டுமா?
/
நாளை மறுதினம் வட்ட வட்டப் புள்ளாரே... வடிவெடுத்த புள்ளாரே! காணும் பொங்கல் களைகட்டுமா?
நாளை மறுதினம் வட்ட வட்டப் புள்ளாரே... வடிவெடுத்த புள்ளாரே! காணும் பொங்கல் களைகட்டுமா?
நாளை மறுதினம் வட்ட வட்டப் புள்ளாரே... வடிவெடுத்த புள்ளாரே! காணும் பொங்கல் களைகட்டுமா?
ADDED : ஜன 15, 2024 12:42 AM

நாளை மறுநாள் (17ம் தேதி) காணும் பொங்கல்; இதற்கு, கன்னிப்பொங்கல், புள்ளாரு பொங்கல், பூப்பொங்கல் என்று பலவிதப் பெயர்கள்.
திருப்பூர் பகுதியில், முதல் நாள் இரவிலேயே துவங்கிவிடும் கொண்டாட்டம்; 'ஓலையக்கா' கும்மி பாட்டு ஓங்கி ஒலிக்கும்.
''ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ...
தாழம்பூ சித்தாடை... தலைமேலயே முக்காடு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே... ஓலே...!
நாழி, நாழி நெல்லுக் குத்தி,
நடுக்கெணத்துல பொங்க வச்சு
கோழியக்குழம்பாக்கி... குத்து நெல்லும் சோறாக்கி,
கோழிக்கறி பத்தலையேன்னு கொதிக்கிறாளாம் ஓலையக்கா...
ஓலே.. ஓலே...!''
வாண வேடிக்கையும், வேட்டுச்சத்தமும் சிறக்கும்.
''வட்ட, வட்டப் புள்ளாரே..
வடிவெடுத்த புள்ளாரே...
முழங்காலு தண்ணியில மொதக்கறியே புள்ளாரே... ஓலே.. ஓலே...!''
பொங்கல் வைத்து, பிள்ளையாருக்குப் படையல் போட்டு, 'ஓலையக்கா' கும்மி கொட்டி 'புள்ளார்'களை தண்ணீரில் விடும்போது, கண்கள் கலங்கும். பொரி கடலை, முறுக்கு, கச்சாயம், அதிரசம், பச்சை மாவு, தின்பண்டங்களைக் கூடை, கூடையாக கொண்டு வந்து, ஒன்றுசேர்ந்து பகிர்ந்து உண்ணும்போது பிறக்கும் பாசப்பிணைப்பு.
'பூப்பறிக்கிற நோம்பி'யை கொண்டாடும் அழகே, அன்றெல்லாம் தனி. இன்று, காணும் பொங்கல் கொண்டாட்டம் களையிழந்திருக்கிறது. கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து, காணும் பொங்கல் சில இடங்களில் மட்டுமே உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், பூங்காக்கள், நதிக்கரையோரங்கள் மட்டுமே, களைகட்டுகின்றன. இந்த முறை, மீண்டும் இந்தக் கொண்டாட்டங்கள் களைகட்டட்டும்!