/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த மூன்று பள்ளிகள்; தேர்வுப்பணி துவக்கம்
/
சிறந்த மூன்று பள்ளிகள்; தேர்வுப்பணி துவக்கம்
ADDED : மே 31, 2025 05:12 AM
திருப்பூர்; கல்விப்பணியில் முன்னேற்றம் காண, பள்ளிகளுக்கு இடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மூன்று பள்ளிகளை தேர்வு செய்து சுழற்கேடயம் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், 2024 - 2025ம் கல்வியாண்டுக்கான மாவட்ட அளவில் சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் சுழற்கேடயம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த மூன்று பள்ளி விபரங்களை சேகரிக்க, முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (துவக்கப்பள்ளி) பழநி மற்றும் வட்டார கல்வி அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பள்ளிகளுக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொள்வர். ஆய்வின் போது,'மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், பள்ளியின் எண்ணும் எழுத்தும் இயக்க செயல்பாடு, கற்றல் அடைவுத்திறன் மற்றும் இணைச் செயல்பாடுகளின் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், பள்ளியின் உள்கட்டமைப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பள்ளியின் செயல்பாடுகளும் ஆராயப்படும்
முந்தைய கல்வியாண்டு தேர்வு செய்த பள்ளிகள் மீண்டும் நடப்பாண்டு பட்டியலில் தேர்வு செய்யப்படமாட்டாது.
ஆய்வு முடிவில் தரத்தை மதிப்பீட்டு, 150க்கு அடிப்படை மதிப்பெண் வழங்குவர். 150க்கு 135, 112 மற்றும், 112க்கும் கீழ் என மூன்று மதிப்பெண் குறியீடுகளாக பள்ளிகள் பிரிக்கப்படுகிறது.
தேர்வான பள்ளி விபரம் ஜூன் இரண்டாவது வாரம் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, 2024 - 2025ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் சிறந்த வகையில் பணியாற்றிய, தேர்வான பள்ளிகள் விபரம் அறிவிக்கப்படும்.

