/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வி நிறுவனங்களில் 'சுற்றுலா கிளப்'
/
கல்வி நிறுவனங்களில் 'சுற்றுலா கிளப்'
ADDED : பிப் 18, 2024 02:08 AM
திருப்பூர்:பள்ளி, கல்லுாரிகள் தோறும் 'சுற்றுலா கிளப்' உருவாக்க, மாநில சுற்றுலா துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின், 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் போது நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், சுற்றுலா உள்ளிட்ட விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதற்காக, 'யுவா டூரிஸம்' என்ற பெயரில், 'சுற்றுலா கிளப்' அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது, 'பள்ளி, கல்லுாரிகளில், சுற்றுலா கிளப் உருவாக்க வேண்டும்' என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப மாநில சுற்றுலா துறை சார்பில், அந்தந்த மாவட்ட சுற்றுலா அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றுலா துறையினர் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளில் செயல்படும் என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., போன்று, 'சுற்றுலா கிளப்' செயல்பட வேண்டும். பள்ளிகளில், 7ம் வகுப்புக்கு மேல், இந்த கிளப்களை உருவாக்கலாம்; கிளப்களில் இணைந்துள்ள மாணவ, மாணவியரை, சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று, சுற்றுலா முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் பெற்ற அனுபவங்களை பிறருக்கு தெரிவிப்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. கட்டுரை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளை நடத்தி, விழிப்புணர்வு பயிலரங்கு நடத்த வேண்டும். சுற்றுலா மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கிளப்களின் செயல்பாடுகளை, மத்திய அரசின் பிரத்யேக 'வெப்சைட்'டில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.