ADDED : மார் 16, 2026 07:30 AM

திருப்பூர்: மாநகராட்சி டவுன்ஹால் வளாகத்துக்கு எஸ்.ஆர்.சி. மாநாட்டு அரங்கம் என பெயர் சூட்டி, கல்வெட்டு திறக்கப்பட்டது.
திருப்பூர் குமரன் ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான டவுன்ஹால் வளாகம் இருந்தது. இதற்கான இடத்தை வழங்கிய நன்கொடையாளர் பெயரில், எஸ்.ரங்கசாமி செட்டியார் டவுன்ஹால் என்ற பெயரில் இது செயல்பட்டு வந்தது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்த வளாகம் இடித்து அகற்றப்பட்டு நவீனமாக மாநாட்டு அரங்கமாக பல்வேறு வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டு பணி துவங்கியது.
அதே வளாகத்தில் ஒரு புறம் 12 கோடி ரூபாய் மதிப்பில் பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கட்டப்பட்டது.
மேலும் 55 கோடி ரூபாய் மதிப்பில், மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதை துணை முதல்வர் உதயநிதி கடந்தாண்டு திறந்து வைத்தார்.
இந்த அரங்கத்துக்கு முன் இருந்தது போல், அதற்கான இடத்தை வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயரை வைக்க வேண்டும் என பல தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்று, இந்த வளாகத்துக்கு எஸ்.ஆர்.சி. ரங்கசாமி மாநாட்டு அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கான கல்வெட்டை நேற்று மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
தேவாங்கர் ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றம், கன்னடதேவாங்க செட்டியார் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ரங்கசாமி செட்டியார் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
