/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை நீர் வடிகால் சீரமைப்பில் இழுபறி; திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
மழை நீர் வடிகால் சீரமைப்பில் இழுபறி; திணறும் வாகன ஓட்டுநர்கள்
மழை நீர் வடிகால் சீரமைப்பில் இழுபறி; திணறும் வாகன ஓட்டுநர்கள்
மழை நீர் வடிகால் சீரமைப்பில் இழுபறி; திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : நவ 05, 2024 11:13 PM

உடுமலை ; தேசிய நெடுஞ்சாலையில், வடிகால் சீரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியை மூடாததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
உடுமலை பகுதியில், வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கி, அவ்வப்போது, கனமழை பெய்து வருகிறது. இத்தகைய மழைப்பொழிவின் போது, உடுமலை நகரில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் இருந்து கொல்லம்பட்டரை வரை, தேசிய நெடுஞ்சாலை, கழிவு நீர் வடிகாலாக மாறி விடுகிறது. பல அடிக்கு வெள்ளம் போல செல்லும் கழிவு நீரில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தத்தளித்தபடி செல்கின்றனர்.
கடந்த வாரம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகள், நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. வடிகாலில் இருந்த கழிவுகளை அகற்றும் வகையில், குழி தோண்டப்பட்டு, பணிகள் நடந்தது.
பணிகள் நிறைவு பெற்ற பிறகும், குழி மூடப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளுக்காக அவ்விடத்தில், டிவைடரும் வைக்கப்பட்டது.
குறுகலான இடத்தில், குழி மற்றும் டிவைடர் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அப்பகுதியை கடக்க திணற வேண்டியுள்ளது. இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
அப்பகுதியில் உடனடியாக பணிகளை நிறைவு செய்து, விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதே போல் பஸ் ஸ்டாண்ட் அருகே பை-பாஸ் ரோட்டில், வடிகால் துார்வார, பெயர்க்கப்பட்ட மெகா சைஸ் கற்கள் ரோட்டோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக ரோட்டோரத்தில் கிடக்கும் கற்களால், விபத்து அபாயம் உள்ளது.
அதையொட்டி, பஸ் ஸ்டாண்ட் நடைபாதையும் சிதிலமடைந்து மக்கள் பயன்படுத்த முடியவில்லை. நகராட்சி நிர்வாகத்தினர் இத்தகைய பணிகளை உடனடியாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பு நிலவுகிறது.