/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வர்த்தகர்களுக்கு வீண் கவலை, குழப்பம் வேண்டாம்'
/
'வர்த்தகர்களுக்கு வீண் கவலை, குழப்பம் வேண்டாம்'
ADDED : செப் 04, 2025 11:59 PM

திருப்பூர்; ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பை ஆடிட்டர்கள் வரவேற்றுள்ளனர்.
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன்:
கடந்த 2017, ஜூலை 1ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி.,ல், 55 கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. 56வது கூட்தத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நான்கடுக்கு ஜி.எஸ்.டி., என்பது, இரண்டடுக்கு ஆக குறைக்கப்பட்டுள்ளது.
12 சதவீதத்திலிருந்த பல பொருட்கள் பூஜ்ஜியம் முதல் 5 சதவீதமாகவும்; 28 சதவீதம் நீக்கப்பட்டு, 18 முதல் 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. வரி மறு சீரமைப்பு நடவடிக்கை, அனைத்து தரப்பு மக்கள் மற்றும் தொழில் துறையினருக்கும் பயனளிக்கும்.
ஏற்கனவே கொள்முதல் செய்து இருப்பில் வைத்துள்ள சரக்குகளை, 22 ம் தேதிக்குப்பிறகு விற்பனை செய்தால், உள்ளீட்டு வரி தேங்குமே, எப்படி மீட்பது என, வர்த்தகர்கள் பலரும் அஞ்சுகின்றனர். விரைவிலேயே இதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுவிடும்; எனவே, வர்த்தகர்கள் வீண் கவலை, குழப்பம் அடையத்தேவையில்லை.
உள்நாட்டு சந்தை வாய்ப்புபிரகாசமாவதற்கு உதவும் ஆடிட்டர் தனஞ்செயன்:
ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பு, ஆடை உற்பத்தி துறையினருக்கு நல்ல பலனை அளிக்கும்வகையில் அமைந்துள்ளது. ஒரு ஆடையின் மதிப்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 12 சதவீத வரி விதிக்கப்பட்டுவருகிறது; 12 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால், 2500 ரூபாய்க்கு கீழ் உள்ள ஆடைகளுக்கு 5 சதவீதமும்; அதற்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 18 சதவீத வரி அமலுக்கு வருகிறது. உற்பத்தியில், ஒரு ஆடையின் மதிப்பு 2500 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான்.
கடந்த பிப்., பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு, 7ல் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, நடுத்தர மக்கள் நுகரும் பொருட்களுக்கான வரி 5 சதவீதம்; குறைந்த திறனுள்ள கார்களுக்கான வரி, 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுக்கான வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய, வேறு புதிய நாடுகளின் சந்தை வாய்ப்புகளை பெறுவதென்பது, நீண்ட கால நடவடிக்கை.
உள்நாட்டு சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன்மூலம், நெருக்கடி சூழல்களை, திறம்பட எதிர்கொள்ளமுடியும். வருமான வரி உச்சவரம்பு சீரமைப்பு, ஜி.எஸ்.டி., வரி மறு சீரமைப்பு மூலம், உள்நாட்டில் மக்களின் பொருட்கள் நுகர்வை அதிகரிக்கச் செய்ய முடியும். தீபாவளி நெருங்கும்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருட்கள் நுகர்வில் எதிர்பார்க்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.