/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
/
அவிநாசி ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 16, 2025 10:11 PM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சோதனை முயற்சியில் போக்குவரத்து மாற்றத்தை செய்துள்ளனர்.
திருப்பூரில் அபரிமிதமான வாகனங்கள் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ரோடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் முறையாக மேம் படுத்தப்படாமல் உள்ளது. பிரதான ரோடுகளில் திருமண முகூர்த்தம், பண்டிகை போன்ற நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதை.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தி, விபத்துக்களை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட சந்திப்புகளில் எவ்வித நெருக்கடியும் ஏற்படாமல் வாகனங்கள் சீராக செல்லவும் பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.
சோதனை ஓட்டம் அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னல் சந்திப்பில், நான்கு ரோடுகள் இணையும் மையமாக உள்ளது. குமார் நகர் சிக்னலில் இருந்து சில மீட்டர் துாரத்தில் இந்த சிக்னலில் நிற்க வேண்டியுள்ளது.
அதேபோல், போலீசார் கண்காணிப்பில் இருக்கும் போது சீராக செல்லும் வாகனங்கள், மற்ற நேரங்களில் தாறுமாறாக கடந்து சென்று வருகின்றன. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், கமிஷனர் உத்தரவின் பேரில், கொங்கு நகர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், சோதனை முயற்சியாக எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் நேராக செல்லும் வகையில், ரோட்டில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
எதிரே உள்ள, இரண்டு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், மற்ற பகுதிக்கு செல்ல கூடிய வாகனங்கள், அங்கிருந்து, நுாறு மீட்டர் துாரத்தில் 'யூடர்ன்' எடுத்து செல்லும் வகையில் அமைத்துள்ளனர்.
இதனால், வாகன ஓட்டிகள் அங்கு நிற்க வேண்டியதில்லை. திரும்ப வேண்டிய வாகனங்கள் மட்டும், அந்த இடத்தில் சென்று திரும்பி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை போக்குவரத்து நிறைந்த நேரத்தில், ஒன்றிரண்டு நாட்கள் கண்காணிக்கப்பட்டு, முழுமையாக அமல்படுத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
வரவேற்பு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க பல்வேறு அறிவுரைகளை கமிஷனர் வழங்கி வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, சோதனை ஓட்டமாக, எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ரோட்டை கடக்காமல், சிறிது துாரத்தில் சென்று 'யூடர்ன்' எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த இடத்தில் வாகனங்கள் சீராக செல்லும். நீண்ட காலமாக பி.என்., ரோடு - பூலுவபட்டி, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இதே பிரச்னை இருந்தது. அங்கும், இதுபோல், மாற்றம் செய்த பின், தற்போது நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வருகிறது.
காலேஜ் ரோடு, அணைப்பாளையம், அனுப்பர்பாளையம் கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே என, பல இடங்களில் வல்லுனர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு இதுபோன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் எங்களின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.