/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் ரோட்டில் வாகன நெரிசல்; மேம்பாலம் அமையுமா?
/
கொழுமம் ரோட்டில் வாகன நெரிசல்; மேம்பாலம் அமையுமா?
ADDED : ஜூன் 30, 2025 10:44 PM

உடுமலை; கொழுமம் ரோடு ரயில்வே கேட் வழியாக பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு, மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடுமலை நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குமரலிங்கம் ரோடு பிரிகிறது.கொழுமம் வழியாக பழநி செல்லும் இந்த ரோடு, 18.80 கி.மீ.,க்கு உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் பகுதி அருகில், திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. அப்பகுதியில், ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது; சுரங்கப்பாதையும் இல்லை.
உடுமலையில் இருந்து பழநிக்கு மாற்றுப்பாதையாக உள்ள கொழுமம் ரோட்டில், வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. ரயில்வே கேட் மூடப்படும் போது, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கிறது.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை வாகனங்கள் நிற்பதால், சந்திப்பு பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போதிய மாற்றுப்பாதையும் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, கொழுமம் ரோடு ரயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொழுமம் ரோட்டில் வாகன போக்குவரத்தும், அகல ரயில்பாதையில், ரயில் சேவையும் அதிகரித்து வருவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நிரந்தர தீர்வுக்கான பணிகளை உடனடியாக துவக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.