/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை வாங்கி கொடுப்பதாக பெண் கடத்தல்; 2 பேர் கைது
/
வேலை வாங்கி கொடுப்பதாக பெண் கடத்தல்; 2 பேர் கைது
ADDED : நவ 11, 2024 06:39 AM
திருப்பூர்,: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டை சேர்ந்த 30 வயது பெண்; திருமணமானவர். ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார்.
பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை தொடர்பாக அப்பெண் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசியவர்கள், ஷெரீப் காலனி பகுதிக்கு வருமாறு தெரிவித்தனர்.
கடந்த 7ம் தேதி அப்பெண் ஷெரீப் காலனிக்கு சென்றார். நின்றிருந்த வாலிபர், நிறுவனத்தின் சாவியை வாங்கி வரலாம் என்று கூறி நம்ப வைத்து, பெண்ணைக் காரில் ஏற்றிக்கொண்டு, தாராபுரம் ரோட்டில் வேகமாக சென்றனர். அப்பெண் காரை நிறுத்த அறிவுறுத்தினார்.
ஆனால், காரை நிறுத்தாமல் தவறாக நடக்க முயன்று கத்தியைக் காட்டி மிரட்டினர். பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, ரோட்டில் சென்ற சிலர் சந்தேகமடைந்து காரை பின்தொடர்ந்தனர். பொல்லிகாளிபாளையம் அருகே அந்த பெண்ணை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். காயமடைந்த அப்பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
திருப்பூர் தெற்கு போலீசார் 'சிசிடிவி' பதிவுகளை கொண்டு விசாரித்தனர். அதில், பெண்ணை கடத்தியவர்கள் நாமக்கல்லை சேர்ந்த சாரதி, 38 மற்றும் மணிகண்டன், 34 என்பது தெரியவந்தது. வேலை தொடர்பாக தொடர்பு கொண்டு நேரில் வரும் போது, அப்பெண் கழுத்தில் நகை அணிந்திருப்பதை பார்த்து, பறிக்க திட்டமிட்டனர்.
பின், மறுநாள் வரும் போது, காரில் ஏற்றிச்சென்ற போது, அப்பெண் கவரிங் நகையை அணிந்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்ற போது, பெண் கூச்சலிட்டதால் அவர்கள் தப்பியது தெரியவந்தது.
மணிகண்டன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.