/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமுறை மீறல் டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்
/
விதிமுறை மீறல் டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்
ADDED : பிப் 20, 2025 11:56 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 43 வது வார்டுக்கு உட்பட்ட சூரியன் நகரில், ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கடந்தாண்டு உயர்அழுத்த மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின் வாரிய விதிகளின்படி 15 ஆயிரம் சதுரடிக்கு மேற்பட்ட தொழிற்சாலைக்கு உயர் அழுத்த மின் இணைப்பு வழங்கும் போது, அதன் வளாகத்துக்குள் மின் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். அதற்குரிய கட்டணங்களும் வாரியத்துக்குச் செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த இணைப்பு வழங்கும் போது 10 ஆயிரம் சதுர அடி மட்டுமே கணக்கு காட்டி, உரிய கட்டணங்கள் செலுத்தாமல் மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான டிரான்ஸ்பார்மர், பொது வழித்தடத்தை ஆக்கிரமித்தும், ஆபத்தான நிலையிலும் அமைக்கப்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மின் வாரியம் ஆகியவற்றுக்கு புகார் அளித்தனர்.
இது தொடர்பாக பல மாதங்கள் பல்வேறு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.தற்போது 10 மாத கால போராட்டத்துக்குப் பின் இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் வாரியத்தினர் அந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றி அமைத்துள்ளனர். மேலும், இதற்கான தொகை, 1.14 லட்சம் ரூபாய், உரிய தொழிற்சாலை நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டது.